சென்னை திருவேற்காட்டில் நடந்த மருத்துவ முகாமை தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “பீகாரில் தேர்தல் நடக்க வேண்டிய காலத்தில் வழக்கம்போல தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கும் அடுத்த ஆண்டு மே 23-ம் தேதிக்குள் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும். நம்மைவிட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலத்திலேயே தேர்தல் நடத்துகிறார்கள். 
எனவே தமிழகத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அடுத்த ஆண்டு மே மாதம் கண்டிப்பாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறும். மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி மலர்ந்தது என்ற செய்தியும் தெரியும். மறைந்த முதல்வர் ஜெயலலிதவுக்கான பாடலை பலரும் பாட தயங்கினார்கள். ஆனால், அவருக்காக பாடல் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இப்போதும் அதிமுகவின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்தப் பாடல் முதலில் ஒலிக்கும். அவர் 4 தலைமுறைகளுக்கான பாடல்களை பாடி உள்ளார். அவருடைய உடல் திருவள்ளுர் மாவட்டத்தில் விதைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயம்” என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.