திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைதளங்களில், மீடூ ஹாஷ்டாக் பயன்படுத்தி, திரையுலகைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பதிவிட்டு வருகின்றனர். பாடகி சின்மயி உள்ளிட்ட பல பெண்கள் திரையிசைப் பாடலாசிரியர் வைரமுத்து மீது குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகின் பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறப்பட்டு வந்தது. நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் அவர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டு வந்தது. 

மீடூ விவகாரம் மெல்ல மெல்ல ஓய ஆரம்பிக்கும் வேளையில், அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் கூறப்பட்டது. இது தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியானது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமாரும் மறுப்பு தெரிவித்திருந்தார். குழந்தை பிறப்பு சான்றிதழ் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் குழந்தையின் அப்பாவின் பெயர் டி.ஜெயக்குமார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த அமைச்சர், உலகிலேயே என் பெயர் மட்டும்தான் டி.ஜெயக்குமார் என்றுள்ளதா என கேள்வி எழுப்பியிருந்தார். அமைச்சர் மீது பாலியல் புகார் கூறப்பட்ட பெண் மீது தற்போது, தன்னை ஏமாற்றி விட்டதாக 3 பேர் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளது என்று அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று கூறியுள்ளார். பெண்கள் துணிச்சலாக அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அப்படி வருபவர்களுக்கு பாதுகாப்பான கட்சி அதிமுக மட்டுமே என்றும் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.

அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனின் இந்த குற்றச்சாட்டால் அடுத்து தமிழகத்தில் என்ன நடக்குமோ என்ற பரபரப்பு தொற்றிகொண்டுள்ளது. தன் மீதான குற்றசாட்டு குறித்து தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன விளக்கம் தரப்போகிறார் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.