தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராமபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் காரில் பயணம் செய்த கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு அலுவலர்கள், நெருக்கமாக இருந்தவர்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டனர். 

இந்நிலையில், அமைச்சரின் நேர்முக உதவியாளருக்கு சளி, இருமல் கடந்த சில நாட்களாக இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. பின்னர், அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும், அமைச்சரின் நேர்முக உதவியாளருடன் தொடர்பில் இருந்த வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், தர்மபுரி மாவட்ட அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலக்கமடைந்து உள்ளனர். ஏற்கனவே அமைச்சர் பெஞ்சமின் ஓட்டுநர் மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் உள்ளட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.