சேலம், நாமக்கல், ஈரோடு, சென்னை, பெங்களூர் என தமிழக அரசுக்கு முட்டை மற்றும் சத்துமாவு சப்ளை செய்து வரும் கிறிஸ்டி நிறுவனத்திற்கு எதிராக திடீர் வருமான வரித்துறை சோதனைக்கு காரணம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தான் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது ரேசன் கடைகளில் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் உணவுப் பொருட்கள் வாங்காத குடும்பங்களின் ரேசன் கார்டுகளை மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அந்த அறிவிப்பின் சாராம்சம். இதன் மூலம் ரேசன் கார்டுகளை பயன்படுத்தாத குடும்பத்தின் பெயரில் அதிகாரிகள் மற்றும் ரேசன் கடை ஊழியர்கள் பொருட்களை பெற்று மோசடி செய்வது குறையும் என்று பாஸ்வான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் நேற்று (05-07-2018) பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்படாது என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மேலும் மத்திய அரசு கூறுவதை ஏற்று ரேசன் கார்டு ரத்து அறிவிப்பை தமிழகத்தில்  அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் காமராஜ் அதிரடியாக அறிவித்தார்.

மத்திய அரசின் ஒரு அறிவிப்பை உடனடியாக ஏற்க முடியாது என்று தமிழக அமைச்சர் சட்டப்பேரவையில் கூறியது உண்மையில் அரசியல் விமர்சகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் மத்திய அரசு எந்த அறிவிப்பை வெளியிட்டாலும் உடனடியாக பின்பற்றுவது தமிழக அரசாகத்தான் இருக்கும். முன்னதாக சைரன் வைத்த கார்களில் யாரும் செல்ல வேண்டாம் என்று பிரதமர் மோடி ஒரு வேண்டுகோள் மட்டுமே விடுத்தார். பா.ஜ.க முதலமைச்சர்கள் கூட தங்கள் கார்களில் இருந்து சைரனை கழட்டவில்லை, ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக கழட்டினார்.

இந்த அளவிற்கு மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த தமிழக அரசு, திடீரென ரேசன் கார்டு ரத்து அறிவிப்பை எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில் அணுகியது பிரச்சனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் எடப்பாடி அரசு மீது கோபத்தில் இருந்த ஆடிட்டர் ஒருவர் சமயம் பார்த்து காத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ஒரு முக்கியமான அறிவிப்பை மாநில அமைச்சர் எப்படி துச்சமென மதித்துள்ளார் பாருங்கள் என டெல்லிக்கு ஒரு தகவலை அந்த ஆடிட்டர் தட்டியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தமிழக உணவுத்துறையுடன் நேரடி தொடர்பு கொண்ட கிறிஸ்டி நிறுவனத்திற்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். அதுமட்டும் இன்றி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைவராக இருக்க கூடிய தமிழக நுகர் பொருள் வாணிப கழகத்தின் அலுவலகத்திற்குள்ளும் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அமர்ந்துள்ளனர். மேலும் நுகர்பொருள் வாணிபகழகத்தின் நிர்வாக இயக்குனர் சுதா தேவி வீட்டிலும் ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதன் மூலம் தங்கள் முடிவுகைள எதிர்த்தால் என்ன நேரும் என்று அமைச்சர் காமராஜுக்கு மட்டும் அல்ல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சேதி சொல்லியுள்ளது மத்திய அரசு.