minister kadambur raju said on cinema and actor salary
நடிகர்களின் சம்பள விவகாரத்தில் அரசு தலையிடாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்ததிலிருந்தே திரையுலகில் சலசலப்புகள் எழ தொடங்கின. 28% ஜிஎஸ்டியுடன் மாநில அரசின் 10% கேளிக்கை வரியையும் சேர்த்தால் அதிகமான தொகை வரியாக வசூலிக்கப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
எனவே மாநில அரசு விதிக்கும் கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதைப் பரிசீலித்த அரசு, கேளிக்கை வரியை 10%லிருந்து 8%ஆக குறைத்தது. அதேபோல திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் வாங்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் விழா காலங்களில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு முதல் நாளில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. முன்னணி நடிகர்கள் மிக அதிகமாக சம்பளம் வாங்குவதால் படத்தின் தயாரிப்பு செலவு அதிகமாகிறது. அதைத் திரும்ப எடுப்பதற்காகவே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
எனவே நடிகர்களின் சம்பளம் என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இந்நிலையில், நடிகர்களின் சம்பளங்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், நடிகர்களின் சம்பளப் பிரச்னையில் அரசு தலையிடாது என தெரிவித்துவிட்டார். ஆனால், திரையரங்குகளில் அதிகமான கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
