தேர்தல் நன்நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தங்க மகள் கோமதிக்கு உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமார், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என துரைமுருகன் கூறிவருவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை. திமுகவின் பி-டீமாக டிடிவி.தினகரன் செயல்படுகிறார். விளையாட்டு துறைக்கு அதிமுக அரசு எப்போதுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் தடகள வீராங்கனை கோமதிக்கு, அவர் விரும்புகிற அளவுக்கு உதவியை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. 

மூன்று தொகுதி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய முயற்சிப்பது அதிமுகவுக்கு ஏற்பட்ட நெருக்கடி, நிர்ப்பந்தம் எதுவும் தங்களுக்கு கிடையாது. திமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சிகளை பழி வாங்கியது போன்ற ஜனநாயகப் படுகொலையை வரலாறு மறந்திருக்காது. 

தகுதி நீக்கத்திற்கு உரிய முகாந்திரம் இருக்கின்ற பட்சத்தில் முடிவெடுக்க வேண்டியது பேரவைத் தலைவர் தான். அவரது அதிகாரத்திற்குள் யாரும் செல்ல முடியாது. வரும் 23ம் தேதி பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலிலே பூஜ்ஜியம் ஆகிவிடுவார்’’ என்று அவர் தெரிவித்தார்.