தவளை மட்டுமல்ல அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களும் தான் தங்கள் வாயாலேயே தங்களுக்கு சிக்கல்களையும், சிறுமைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஒன்றா இரண்டா எத்தனையோ சம்பவங்கள் இப்படியாக நடந்துவிட்டன. ஆனாலும் அ.தி.மு.க.வின் வி.ஐ.பி.க்கள் தங்களை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை.

சர்ச்சை மற்றும் பகீர் தகவல்களை பேசுவது அரசியல்வாதிகளின் வழக்கம். ஆனால் அ.தி.மு.க.வினரோ தாங்கள் மிக மிக மோசமாக கிண்டலடித்து கலாய்க்கப்படும் அளவுக்குதான் சில ஸ்டேட்மெண்டுகளை அள்ளிவிட்டு வம்பில் சிக்கிக் கொள்கிறார்கள். 

‘நொய்யல் ஆற்றில் வரும் நுரையானது சாயக்கழிவு அல்ல, கோயமுத்தூரில் மக்கள் சோப்பு போட்டு குளித்ததால் உருவான நுரை.’ என்று அடேங்கப்பா ஸ்டேட்மெண்டை தட்டிவிட்டு, தாரை தப்பட்டை அடிக்காத குறையாக கிண்டலடிக்கப்பட்டார் அமைச்சர் கருப்பணன். 

வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க, அணை நீரில் தெர்மகோல் விட்டு சர்வதேச புகழை தேடியதும், அவ்வப்போது பேட்டிகளில் எதையாவது சொல்லி தாறுமாறாக மீம்ஸில் சிக்கிக் கொள்வதும் செல்லூர் ராஜூவின் ஸ்டைல். 

’தமிழக வனத்தில் சிங்கம் இருக்கிறது.’ என்று சொல்லி, தமிழக வனம் பற்றிய தனது அதி பயங்கர அறிவை வெளிக்காட்டி, வகையாய் வாங்கிக் கட்டிய திண்டுக்கல் சீனிவாசன் பற்றி பக்கம் பக்கமாய் எழுதலாம். 

’எங்களுக்கு எதுக்கும் கவலையில்லை. எல்லாத்தையும் மேலே இருக்கும் மோடி பார்த்துக்குவார்.’ என்று வெளிப்படையாய் பேசி விமர்சனங்களால் இன்று வரை வெளுத்துக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. 

இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்கள்...

இவர்களுக்கெல்லாம் சற்றும் சளைக்காதவர் அமைச்சர் ஜெயக்குமார். பரபரப்பில் சிக்கும் வகையில் மேடை மைக்குகளில் மட்டுமல்ல, பேட்டி மைக்குகளிலும், ‘போன் மைக்கிலும்’ பேசி தனக்குத்தானே சூப் வைத்துக் கொள்வார்! என்று  தி.மு.க. இவரை விமர்சித்து தள்ளுகிறது. இந்நிலையில், நேற்றும் நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பேட்டிக்கு வந்த ஜெயக்குமார்...”அ.தி.மு.க.வுடன் பி.ஜே.பி. கூட்டணி பற்றி மத்திய அமைச்சர் அத்வாலே கூறியது, பி.ஜே.பி.யின் சொந்த கருத்துதானா என்பதை, அக்கட்சி தலைமைதான் விளக்க வேண்டும்.” என்றவர், அடுத்துப் பேசியதுதான் ஹைலைட்டு...

“ஒரு அமைச்சரின் கருத்தை பெரிதாய் எடுத்துக் கொள்ள முடியாது. கட்சி தலைமையிடம் இருந்து தான் கருத்து வரவேண்டும். நாங்கள் தெளிவாக உள்ளோம், தேர்தல் வரும்போது கட்சியினரின் ஒருமித்த கருத்து அடிப்படையில் கூட்டணி முடிவு செய்யப்படும். ‘அ.தி.மு.க.வை பா.ஜ.க. விமர்சிப்பதை பார்த்துக் கொண்டு ச்சும்மா இருக்க முடியாது.’ என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சொன்னது அவரது சொந்த கருத்தாக இருக்கலாம்.” என்று பேசிவிட்டு நகர்ந்தார்.  இந்தப் பேட்டியை கவனித்த அ.தி.மு.க. சீனியர்களே தலையில் அடித்துக் கொள்கிறார்கள். காரணங்களாக அவர்கள் விளக்குவன... 

* ஒரு அமைச்சரின் கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! என்று சொல்லியிருக்கும் ஜெயக்குமார் தானும் ஒரு அமைச்சர் என்பதை மறந்துவிட்டாரா? தமிழக அரசியலரங்கில் என்ன நடந்தாலும் முதல் ஆளாக பேட்டி கொடுக்கிறார் அவர். அப்படியானால் அமைச்சரான அவர் பேசுவதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! அப்படித்தானே!? மத்திய அமைச்சரின் பேச்சையே ’ஒன்றுக்கும் உதவாதது’ எனும் ரீதியில் பேசும் இவரோ ஒரு மாநில அமைச்சர். அப்படியானால் இவர் பேச்சுக்களும், கருத்துக்களும் அதைவிட மோசம் அப்படித்தானே?

* கட்சி தலைமையிடம் இருந்துதான் கருத்து வர வேண்டும்! என்று சொல்லியிருக்கிறார். இதுவரையில் ஆயிரம் விஷயங்களுக்கு  ஜெயக்குமார்தான் கருத்தும், பதிலும் சொல்லிக் கொண்டிருக்கிறார். தலைமை மிக குறைவாகத்தான் பேசுகிறது. அப்படியானால் ஜெயக்குமார் சொல்வதை கண்டுக்காமல் விட்டுடலாமா,  அ.தி.மு.க. தலைமை சொல்லட்டும்! என்று காத்திருக்கலாமா ஒவ்வொரு விஷயத்திலும். ‘அமைச்சர் சொல்வதை எவன் கேட்பான்? ஒருத்தனும் கேட்க மாட்டான்.’ என்பது போல் இருக்கிறது இவர் கருத்து. இதன் மூலம் தனது அதிகாரத்துக்கும், பதவிக்கும், மரியாதைக்கும் தானே சூப் வைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயக்குமார். 

* அதேபோல் ‘அ.தி.மு.க.வை பி.ஜே.பி. விமர்சிப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது! என தம்பிதுரை சொன்னது அவரோட சொந்த கருத்து.’ன்னு ஜெயக்குமார் சொல்லியிருப்பது மகா அவமானம் கட்சிக்கு. ஒரு சீனியர் அமைச்சர், முன்னாள் சபாநாயகர், தலைவரும் தலைவியும் கொடுத்த வரத்தால் இப்படியொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர், தனக்கு எதிராக எவ்வளவு பெரிய ஆதாரா ஆயுதம் வந்து நின்று மிரட்டினாலும் அதை கட்சி தந்திருக்கும் அதிகாரத்தால் மடக்கி தூசாக்குபவர்...கட்சியை அசிங்கப்படுத்துவது போல் இப்படி பேசியிருக்கலாமா? அது தம்பிதுரை கருத்தென்றால், உங்கள் கருத்து என்ன ஜெயக்குமார்? நம் கட்சியை பி.ஜே.பி. விமர்சித்தால் நீங்கள் கம்முன்னுதான் இருப்பீங்களா? எந்த அடிப்படையில், எந்த தோரணையில் இதை சொன்னீர்கள்? ...என்று சரமாரியாக கேள்விகள் கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல வேண்டியது அமைச்சர் ஜெயக்குமார்தான். (ஆனால் அவர் அமைச்சர் என்பதால், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா?)