பைபிளில் ஒரு வாக்கியம் உண்டு... “உன் முதுகில் அழுக்கு மூட்டைகளை சுமந்து கொண்டு, அடுத்தவன் கண்ணிலிருக்கும் சிறு தூசியைப்பற்றி பேசாதே!” -என்று. இது இன்றைய அரசியலில் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு மிக தெளிவாய் பொருந்துகிறது. 

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தே தூக்கி எறிந்திருக்கின்றனர் எடப்பாடியும், பன்னீரும் இணைந்து. இந்நிலையில், இந்த அதிரடி பற்றிப் பேசியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார்... “அ.தி.மு.க. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால்தான் அவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும். அந்த அடிப்படையில்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை அ.தி.மு.க.வில் உள்ள மற்றவர்களும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.” என்று நியாயம் உரைத்தார். 
 
அதே நாளில் தினகரனின் வலது கரமான வெற்றிவேலோ...”ஓ.ராஜா நீக்கப்பட்டது, ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பாரோ அடஹித்தான் தற்போது எடுத்துள்ளார்கள்.” என்று ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் பாராட்டிவிட்டு, நேரடியாக ஜெயக்குமாரை ஒரு பிடி பிடிக்க துவங்கியவர்...”அமைச்சர் ஜெயக்குமார் பற்றி என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளது. எம்.பி.க்கு தம்பி பாப்பா பிறந்துள்ளது! என்று முதலில் கூறினேன், பின் அதை ஆதாரங்களுடன் நிரூபித்தேன். ஜெயக்குமாரின் முகத்திரையை கிழித்து காண்பித்தேன். 

ஆனால் என்னவாயிற்று அந்த பிரச்னை? ஜெயக்குமாரால் பாதிக்கப்பட்ட பெண் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை. இந்த சூழலில் ஜெயக்குமார் என்னவோ நல்லவர் போல் பேசிக்கொண்டிருக்கிறார் பொதுவெளியில். இந்த சூழலில் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்...ஜெயக்குமார் பற்றி என்னால் தினமும் ஒரு வீடியோ வெளியிட முடியும். அவருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியாச்சு, ஆனால் இதுவரை எந்த விளக்கமும் இல்லை.

நல்லவர் போல் நடித்து, ‘என்னைப் போல் யாரோ மிமிக்ரி செய்து பேசியிருக்கிறார்கள். அது என் வாய்ஸ் இல்லை.’ என்று அந்தப் பெண் தரப்புடனான போன் பேச்சை மறுத்திருக்கிறாரே, இவர் மீது தவறில்லை என்றால் டி.என்.ஏ. டெஸ்ட்டுக்கு வரவேண்டிதானே? அதற்கு ஏன் உடன்பட மறுக்கிறார். அந்த குரல் தன் குரலில்லை என்றால், அவர் வரட்டும் டெஸ்ட் செய்து எது உண்மை என்று கண்டுபிடித்துவிடலாம். இப்படியொரு மனிதர் மீது நடவடிக்கை எடுக்காமல், இன்னமும் கட்சியில் வைத்துக் கொண்டிருப்பதற்கு இந்த அரசுதான் வெட்கப்பட வேண்டும்.” என்று தாளித்திருக்கிறார் வெற்றிவேல்.  

இந்நிலையில், ”வெற்றிவேலிடம் நிச்சயமாக ஜெயக்குமாரை பற்றி வீடியோ ஆதாரங்கள் உள்ளன. எப்பவுமே பெரும் பூகம்பத்தை கிளப்பும் முன்பாக சின்னதாக சில அதிர்வுகளை உண்டாக்குவார் வெற்றிவேல்! அதிலிலேயே அலர்ட் ஆகிவிட்டால் பிரச்சனையில்லை. அலட்சியம் செய்தால் பூகம்பத்தை இறக்கி நாசம் செய்துவிடுவார். அப்பல்லோவில் அம்மா சுயநினைவுடன் இருந்தார்கள்! என்று முதலில் சொன்னவர் அதை நிரூபிக்க ஒரு வீடியோவையும் வெளியிட்டார். 

’எம்.பி.க்கு தம்பி பாப்பா’ என்றபோதே அலர்ட் ஆகாததால்தான் அது பெரிய பிரச்னையாச்சு. இப்போதும் அஜாக்கிரதையாக இருந்தால் நிச்சயமாக வீடியோக்களை தட்டிவிட துவங்குவார்! இது தேர்தல் நேரத்தில் ஒட்டுமொத்தமாக கட்சியின் பெயரை காலி செய்துவிடும்.” பதறுகிறது ஆளுங்கட்சி தரப்பு. அதேவேளையில் வெற்றிவேல் ரிலீஸ் செய்யும் வீடியோக்களில் என்ன இருக்கும், எப்படி இருக்கும்? என்று பார்த்திட குறுகுறுப்புடன் காத்திருக்கிறார்கள். தலையெழுத்து!