minister jayakumar teased kamal meeting with rahul and sonia

காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருடனான கமலின் சந்திப்பை அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். மேலும் சென்னை-சேலம் இடையேயான 8 வழி சாலையின் அவசியம் குறித்தும் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை-சேலம் இடையே 8 வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாலை விரிவாக்கத்துக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. அதனால் விவசாயிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவிக்கின்றன. 

இத்திட்டத்திற்கு எதிராக மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷும், 8 வழிசாலை திட்டத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்புகள் குறைந்த பாடில்லை. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்தின் அவசியம் குறித்து பேசினார். அப்போது, ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் அவசியம். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களின் நலனுக்காகவே முன்னெடுக்கப்படும். அந்த வகையில் தான் 8 வழி சாலையும் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பான மக்களின் குறைகளை கேட்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் மக்கள் தங்கள் குறைகளை கூறலாம். 

இந்தியாவிலேயே உட்கட்டமைப்பில் சிறந்து விளங்கும் சில மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகுதான் விபத்துகள் குறைந்திருக்கின்றன என விளக்கமளித்தார். 

காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தியை மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அதன்பிறகு சோனியா காந்தியையும் சந்தித்து பேசினார். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்தாகவும் கமல் கூறினார். 

கமலின் இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கமல் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அது அவருடைய உரிமை. அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். மக்களோடு மக்களாக இருப்பவர்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கு கமலின் சந்திப்பு குறித்து கவலையில்லை என தெரிவித்தார்.