தேர்தலைக் கண்டு அஞ்சும் இயக்கம் அதிமுக இல்லை என்றும், அதே நேரத்தில் தேர்தல் வர வேண்டும் என்று நினைக்கும் ஒரே ஆள் மு.க.ஸ்டாலின் தான்  என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கும் டி.டி.வி.தினகரன் தரப்புக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. தினகரனின் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக கடிதம் அளித்தனர்.

இந்நிலையில், மெஜாரிட்டியை இழந்துவிட்ட எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், தமிழகத்தில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் எனவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், அதிமுக தேர்தலைக் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல என்று தெரிவித்தார்.

தற்போது பொதுத் தேர்தலை  திமுக எம்எல்ஏக்களே விரும்பாத நிலையில் தேர்தல் வேண்டும்  என நினைக்கும் ஒரே ஆள் மு.க.ஸ்டாலின் தான் என்றும் அமைச்சர் ஜெயகுமார் குறிப்பிட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதில் எந்தவிதமான  உள்நோக்கமும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.