ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அ.தி.மு.க.வில் அதிகம் வாயாடியவர்கள் என்று ஒரு லிஸ்டை எடுத்துப் பார்த்தால்...மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முன் வரிசையில் முதலாவதாய் உட்கார்ந்திருப்பார். 

அந்தளவுக்கு அ.தி.மு.க.வின் ஆளும் அணியின் பிரசார பீரங்கியாக நின்று குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வதும், பதிலுக்கு புகார் குண்டுகளை போட்டு நொறுக்குவதுமாக அதகளம் செய்தார் மனிதர். அது மட்டுமா? அவ்வப்போது பாடல் பாடுவது, மீம்ஸில் அதிகம் இடம் பெறும் அமைச்சர் எனும் பட்டத்தை தட்டிச் சென்றது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மேடையில் சுசீலாவுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி அபிநயித்தது...என்று  எண்டர்டெயிமெண்ட் ஏரியாவிலும் அண்ணன் தான் கில்லி. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜெயக்குமாரின் நிலைமை எப்படி இருக்கிறது! என்று நாம் சொல்லி யாருக்கும் விளங்க வேண்டிய அவசியமில்லை. ’சிபாரிசு கேட்டு வந்த தொகுதி பெண்ணுக்கு வயிற்றில் வாரிசை கொடுத்துவிட்டார் ! அம்மா வழியில் ஆட்சி செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஒரு அபலை கன்னியை அம்மாவாக்கிவிட்டார்!’ என்று அவரை பொரியல் செய்து பந்தி வைத்துக் கொண்டிருக்கின்றனர். 

இதில் அமைச்சர் ஜெயக்குமார் அப்செட்தான்! என்றாலும் அவருக்குள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ‘கருத்து சிங்கம்’ மட்டும் இன்னும் உறங்கவோ, அடங்கவோ இல்லை. அதற்கு உதாரணமாக, ‘வடசென்னை’ படத்தில் மீனவர்களை அட்ராசிட்டி பேர்வழிகளாகவும், மீனவ பெண்களை கொச்சையாக ஆபாசம் பேசும் பெண்களாகவும், மொத்தத்தில் குற்றப் பின்னணியுடைய  ஒரு சமுதாயமாகவே இயக்குநர் வெற்றிமாறன் காட்டியிருக்கிறார்! என்று பெரும் புகார் வெடித்துள்ளது. மீனவ மக்கள், மீனவ சங்கங்கள் பலர் வடசென்னை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், நாயகன் தனுஷ் ஆகியோரை விமர்சனத்தில் வகுந்து கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில் அவர்களுடன் அமைச்சர் ஜெயக்குமாரும் இணைந்து நிற்கிறார். அவர் “உயிரைப் பணயம் வைத்து மீன்பிடித் தொழிலை மீனவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதை சினிமாக்காரர்கள் உணர வேண்டும். எங்கள் புரட்சித் தலைவர் மீனவர்களை கொண்டாடினார். ஆனால் இன்றோ மீனவர்களை தவறாக சித்தரித்துப் படம் எட்க்கிறார்கள். இந்தப் படத்துக்கு எப்படி சென்சார் போர்டு அனுமதி கொடுத்ததோ தெரியவில்லை.” என்று பாய்ந்திருக்கிறார். 

இதைப் பார்த்து வடசென்னை படக்குழுவும், அ.தி.மு.க.வில் ஜெயக்குமாரை ஆகாத தரப்புகளும் ‘இந்த குரூரத்துக்கு நடுவுலேயும் இவருக்கு குசும்பு போகலை பாரு?” என்று கிண்டலடிக்கின்றனர்.