வெளியே நாத்திகவாதிகளாகவும், வீட்டில் ஆத்திகவாதிகளாக மாறி இரட்டை வேடம் போடுவதாக திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

பகுத்தறிவு கொள்கையையும், பெரியாரையும் உயர்த்தி பிடித்துக் கொண்டு கடவுள் மறுப்புக் கொள்கையை உரக்க முழங்கி வரும் திமுக விஐபிகள் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க குவிந்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று முன்தினம் அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருடன் நெருங்கிய உறவினர்களுடன் வந்து, அத்திவரதரை தரிசனம் செய்தனர். வசந்த மண்டபத்திற்கு சென்ற, துர்கா, அத்திவரதருக்கு பச்சை பட்டாடை, பிரம்மாண்ட மலர் மாலை அணிவித்து தரிசனம் செய்தார். திமுகவில் எம்.பி.ஜெகத்ரட்சகன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசிக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.

 

இந்நிலையில், மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் அத்திவரதரை காண விஐபி பாஸ் கொடுக்குமாறு திமுகவினர் பரிந்துரை கடிதம் கொடுப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், கடவுள் நம்பிக்கை குறித்து திமுகவினர் இனியும் இரட்டை வேடம் போடத் தேவையில்லை என்றார். 

அத்திவரதர் நாத்திகவாதிகளை ஆத்திகவாதிகளாக மாற்றியுள்ளார். கடவுள் இல்லை என்று அண்ணாவே கூறவில்லை என்றார். மேலும் 7 பேர் விடுதலைக்காக தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக அமைச்ச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.