அதிமுகவின் இரு அணியினரும் ‘’ கூடி’’  வாழ்ந்தால் ‘’கோடி’’ நன்மையாம் !!  சொல்கிறார் அமைச்சர் ஜெயகுமார் !!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திச் செல்வதாகவும், அதிமுகவின் இரு அணிகளும் ‘’ கூடி’’  வாழ்ந்தால் ‘’கோடி’’ நன்மை எனவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, எழுச்சியோடு கொண்டாடப்பட வேண்டும்' என்ற, ஜெ., கனவை நிறைவேற்றும் விதமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  ஒவ்வொரு மாவட்டத்திலும், விழாவை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

முதலமைச்சர்,  தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள்  என அனைவரும் விரும்புவது, ‘’ கூடி’’  வாழ்ந்தால் ‘’கோடி’’ நன்மை என்பது தான் என கூறினார்.

நாங்கள் அனைவரும், ஒருமித்த கருத்தோடு, 'யாரையும் விடக்கூடாது; அரவணைத்து செல்ல வேண்டும்' என்ற, மனப்பாங்கோடு செயல்படுகிறோம் என தெரிவித்த ஜெயகுமார், ஓபிஎஸ் அணியுடன், பேச்சு நடத்த கதவு திறந்தே உள்ளது என கூறினார்.

எம்.ஜி.ஆர்., தொடங்கிய அதிமுகவை, ஜெயலலிதா  எக்கு கோட்டையாக உருவாக்கினார். அதே கட்டுக்கோப்போடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியும், ஆட்சியும் சென்று கொண்டிருக்கிறது. மற்றவர்களை பற்றி, நாங்கள் கவலைப்படுவதாக இல்லை எனவும் ஜெயகுமார் கூறினார்.