காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்க்கும் வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார்.

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி, கே.சி.பழனிசாமியை கட்சி பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.

தனது நீக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்த கே.சி.பழனிசாமி, எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கும் தன்னை நீக்க பழனிசாமிக்கோ பன்னீர்செல்வத்துகோ அதிகாரம் இல்லை என தெரிவித்தார். மேலும் அதிமுகவின் புதிய பதவி திருத்தங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருக்கையில், பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரோ, பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளரோ கிடையாது என கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார். மேலும் பாஜகவிற்கு எதிராக பேசினால், கட்சியிலிருந்து நீக்குவார்களா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

கே.சி.பழனிசாமியின் நீக்கத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கட்சியின் கொள்கை முடிவுகள் தொடர்பாக யாரும் தன்னிச்சையாக கருத்து தெரிவிக்க முடியாது. கட்சி விதிகளை மீறி செயல்பட்டால், கட்சியிலிருந்து நீக்காமல், என்ன மாலையா போடுவார்கள்? கே.சி.பழனிசாமி நீக்கத்தின் பின்னணியில் யாரும் இல்லை என ஜெயக்குமார் விளக்கமளித்தார்.