மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால், மாநிலத்திற்கான உரிமையை இழப்பதாக அர்த்தமில்லை. மாநில உரிமையை இழக்கும் பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு நேற்றுடன் முடிந்தது. ஆனால் வாரியம் அமைக்கப்படவில்லை. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றம் முற்றிலுமாக முடக்கப்பட்டது. போதுமான அழுத்தம் கொடுக்கப்பட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. தமிழக அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்தாலும், எதிர்க்கட்சி என்ற முறையில் திமுக குற்றம்தான் சுமத்தும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

17 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக நினைத்திருந்தால், காவிரி விவகாரத்திற்கு தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் எந்தவொரு சூழலிலும் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறவில்லை. ஆனால் தற்போது தமிழக அரசு சட்ட போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் வேளையில், அரசியல் செய்வதற்காக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்றார்.

மேலும் மாநில நலனுக்காகவே மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்கிறது. அந்த இணக்கத்திற்காக மாநில உரிமைகளை இழக்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என ஜெயக்குமார் தெரிவித்தார்.