கல்லூரியில் படிக்கும் போதே நானும் மிகப்பெரிய குத்துச்சண்டை மாவீரன்தான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அப்போது குத்துச்சண்டையில் ஈடுபடுவது போல செய்துகாட்டினார். 

அண்மையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரண்டாவது ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 16 நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மொத்தம் 16 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இதில், சென்னையை சேர்ந்த கலைவாணி காலிறுதியில் பூட்டான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜோசி அரைபேகாவை எதிர்கொண்ட கலைவாணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். 

இந்நிலையில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்ற, சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கலைவாணி, அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது கல்லூரியில் படிக்கும் போது தானும் ஒரு மிகப்பெரிய குத்துசண்டை வீரர் என்ற பயங்கரமான ஃப்ளாஷ்பேக் ஒன்றை அவிழ்த்து விட்டதோடு குத்துசண்டையில் ஈடுபடுவது போல் செம போஸ் ஒன்றையும் தந்து அருளினார் மீன்வளத்துறை அமைச்சர்.