காவிரி விவகாரத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தை 10 நாட்களாக முடக்கியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்காக இதுவரை இல்லாத அளவிற்கு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. 10 நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறோம்.

நாடாளுமன்றத்தை முடக்கியதோடு, வெளியிலும் அதிமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்துக்காகவும் காவிரியில் தமிழகத்தின் உரிமைக்காகவும் போராடியவர் ஜெயலலிதா. அவருடைய வழியில், தற்போதைய அதிமுக அரசின் நிலைப்பாடும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான்.

அதற்கான அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுத்துவருகிறோம். எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று நம்புவோம் என்றார். மேலும் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இன்றைக்கு வலியுறுத்தும் திமுக, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தது? என்ன மாதிரியான அழுத்தத்தை கொடுத்தது? அன்றைக்கே ராஜினாமா செய்திருக்க வேண்டியதுதானே? என கேள்வி எழுப்பினார்.

மேலும், நாடாளுமன்றத்தை 10 நாட்களாக அதிமுக எம்பிக்கள் முடக்கியுள்ளனர். வெளியே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். திமுக எம்பிக்கள் என்ன செய்தனர்? என கேள்வி எழுப்பினார்.