நீட் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ஸ்டாலினுக்கு உரிமை இல்லை என மீன்வளத்துறை அமைச்ச்ர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து கட்சிகளும் மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தனர். 
ஆனால் அனைத்து எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி முடித்து அதனடிப்படையில் மருத்துவ கலந்தாய்வையும் நடத்தியது. 

மேலும், கடைசி நீட் முறையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என தமிழக அரசு சொல்லி வந்தாலும் திடீரென உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம் என கூறி கையை விரித்தது. 

இதனால் அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. 

இதைதொடர்ந்து மனமுடைந்த அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய கோரியும் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

அதில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. அதன்படி அனிதா மரணத்தை தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நீட் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட ஸ்டாலினுக்கு உரிமை இல்லை என தெரிவித்தார்.