பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய மத்திய அரசில் வெளியுறவுத் துறை செயலாளராக பதவி வகித்தவர் ஜெய்சங்கர் .  கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை  பாஜக. கைப்பற்றி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தபோது புதிய அமைச்சரவையில்  வெளியுறவுத்துறை மந்திரி பதவி ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டது.
 
இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த பாஜக. தலைவர் அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் மாநிலங்களவையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரு உறுப்பினர்களுக்கான இடம் காலியானது. இந்த இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது குஜராத் முதலமைச்சர்  விஜய் ருபானி, அம்மாநில பாஜக தலைவர் ஜிட்டு வகானி ஆகியோர் உடனிருந்தனர்.

குஜராத்தில் காலியாக உள்ள மற்றொரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜகவை சேர்ந்த ஜுகல்ஜி தாக்கோர் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தன்னை தேர்வு செய்த குஜராத் எம்.எல்.ஏ.க்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.