அரசு நிகழ்வுகளில் பங்கேற்க நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் துபாய் செல்ல திட்டமிட்டருந்த நிலையில் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் வீடு திரும்பினார்.விசாவில் குறிப்பிடப்பட்டுள்ள எண் மாற்றப்பட்டு இன்று மாலை மீண்டும் துபாய் பயணம் செய்யவுள்ளார்.

முதலமைச்சர் துபாய் பயணம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 25 ஆம் தேதி துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து துபாய் தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியவர், தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து தமிழகத்தில் தொழில் தொடங்க லூலூ நிறுவனத்தோடு 3500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமும் மேற்கொண்டார். தனது துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு நாள் அரசு முறை பயணமாக துபாய் செல்ல தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டமிட்டிருந்தார். அங்கு நீர்பாசனம் தொடர்பாக நடைபெறவுள்ள கருந்தரங்கில் கலந்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

துரைமுருகனுக்கு அனுமதி மறுப்பு

 இன்று காலை 9.30 மணி துபாய் விமானத்திற்கு காலை 7.50 மணிக்கே அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். பாஸ்போர்ட் மற்றும் விசா சரிபார்க்கப்பட்டது. அப்போது விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் துபாய் செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பயணம் செய்ய முடியாமல் துரை முருகன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். இதனையடுத்து விசாவில் உள்ள பழைய பாஸ்போர்ட் எண் மாற்றப்பட்டு இன்று இரவு விமானத்திற்கு டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு விமானம் மூலம் துபாய் செல்லும் துரை முருகன் நாளை துபாய் கண்காட்சி அரங்கில் நடைபெறும் இறுதிநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் வரும் 1 ஆம் தேதி அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.