’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இப்போது மரத்தடி ஜோசியர் போல ஆகிவிட்டார்’ என அமைச்சர் துரைக்கண்ணு கடுமையாக விமர்சித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களை நடத்தி, பொதுமக்களை சந்தித்து வருகிறார். இதனை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  இந்நிலையில், எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கடைவீதியில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் துரைக்கண்ணு பேசியபோது, ’இன்னைக்கு ஆட்சி கலைந்துவிடும், நாளைக்கு நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று மரத்தடி ஜோசியர் போல அடிக்கடி ஆரூடம் சொல்லி வருகிறார் மு.க.ஸ்டாலின். மக்களை கவர, சைக்கிளில் பயணம் செய்து பார்த்தார். டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்தார். இதில் எதுவுமே பலன் அளிக்கவில்லை. இப்போது மரத்தடி ஜோசியர் ஆகிவிட்டார்.

ஆனால் அவர் சொல்வதெல்லாம் பலிக்காது. ஏனென்றால் அவர் மீது நிறைய வழக்குகள் இருக்கின்றன. அதனால் திகார் ஜெயிலுக்கு போவது உறுதி. டி.டி.வி,.தினகரனும் அஅவர் போலத்தான். அவர் செய்த துரோகத்தால் தான் சசிகலா சிறையில் இருக்கிறார். டி.டி.வி பேச்சை கேட்டு நம்பி சென்ற 18 எம்எல்ஏக்களும் பதவியை இழந்து நிற்கின்றனர். அதனால் குக்கரால் இனி விசில் அடிக்கவே முடியாது. எத்தனை ஸ்டாலின் வந்தாலும் சரி, எத்தனை தினகரன் வந்தாலும் சரி அதிமுகவை அசைக்கவே முடியாது' என அவர் தெரிவித்தார்.