Asianet News TamilAsianet News Tamil

ஆளுநரின் நடவடிக்கையை முதன்முறையாக எதிர்த்து பேசிய அதிமுக அமைச்சர்

minister cv shanmugam opinion about vice chancellor appointment
minister cv shanmugam opinion about vice chancellor appointment
Author
First Published Apr 7, 2018, 1:03 PM IST


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழகத்திலும் மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடகாவிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

காவிரி விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா சார்பில் மத்திய அரசுக்கு அந்தந்த மாநிலங்களின் நிலைப்பாடுகளுக்கு தகுந்தபடி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. காவிரி விவகாரத்தில் எதிரெதிர் நிலைப்பாட்டை தமிழகமும் கர்நாடகமும் கொண்டுள்ளதால், பிரச்னை நீடித்து வருகிறது.

தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆளுநர் நியமித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை துணைவேந்தராக நியமித்ததற்கு தமிழக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழர்களின் தன்மானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இது என ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து கவிஞர் வைரமுத்துவும் டுவிட்டரில் வருத்தத்தை பதிவிட்டிருந்தார். பிரதமர் பதவிக்குத்தான் தமிழருக்கு தகுதியில்லை என்றால், துணைவேந்தர் பதவிக்குமா ஒரு தமிழருக்கு தகுதியில்லை? என வருத்தத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

நடிகர் விவேக்கும் இதுதொடர்பான கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இப்படி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கு எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதுதொடர்பாக ஏற்கனவே கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், துணைவேந்தர் நியமனத்துக்கும் தமிழக அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை ஆளுநர் தன்னிச்சையாக நியமித்தது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். இந்த நியமனத்துக்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் சண்முகம் தெரிவித்தார்.

ஆளுநர் பன்வாரிலால் தமிழகம் முழுவதும் ஆய்வும் ஆலோசனையும் நடத்தியபோது, எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தபோது கூட ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதை ஆதரிக்கும் பொருட்டே கருத்துகளை தெரிவித்துவந்தனர். ஆனால், துணைவேந்தர் நியமனம் ஆட்சியாளர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையே  அமைச்சர் சண்முகத்தின் பேச்சு காட்டுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios