அவங்க சொல்லும் காரணத்தை ஏத்துக்க முடியாது! சந்திர பிரியங்கா 3 நாட்களுக்கு முன்பே நீக்கம்! சபாநாயகர் செல்வம்.!
முக்கியத் துறைகளை வைத்திருந்த சந்திர பிரியங்கா சாதி மற்றும் பாலினரீதியில் தாக்கப்படுவதால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
அமைச்சரை நியமிப்பது நீக்குவது என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை. இலாக மாற்றம் மற்றும் புதிய அமைச்சர் நியமனம் குறித்து முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்வார் என சபாநாயகர் செல்வம் கூறியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பரான முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் தான் சந்திர பிரியங்கா. இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன் மற்றும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளை வைத்திருந்த சந்திர பிரியங்கா சாதி மற்றும் பாலினரீதியில் தாக்கப்படுவதால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார். அவரின் ராஜினாமா முடிவு ஏற்படுத்திய அதிர்ச்சியைவிட அவர் வைத்த குற்றச்சாட்டுகள் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் கண்டிக்கத்தக்கது ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது துறையில் திறம்பட பணியாற்றாததால் பலமுறை சந்திர பிரியங்காவை முதல்வர் அழைத்து அறிவுரை வழங்கியும் அவர் வேலைகளை திறம்பட செய்யவில்லை எனக்கூறினார். புதிய அமைச்சர் நியமனம் இலாகா மாற்றம் குறித்து முதலமைச்சர் ரங்கசாமி முடிவு செய்வார். யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும். யாரை நீக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை என்றார்.
சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியிலிருந்து 3 நாட்களுக்கு முன்பே நீக்கப்பட்டுவிட்டார். இதுதொடர்பாக விரைவில் அரவாணை வெளியிடப்படும் என்றார். மேலும், புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. சந்திர பிரியங்கா கூறும் காரணங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.