புதிய அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்தே மக்கள் மனதில் முக்கிய கேள்வி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்பதாக தான் உள்ளது.

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பட்டது. மே 5ம் தேதி முதல் 31ம் தேதி வரை தேர்வு நடைபெறவிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் செய்முறை தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. 

தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவியேற்றுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்தே மக்கள் மனதில் முக்கிய கேள்வி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்பதாக தான் உள்ளது. இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்பினர் பங்கேற்றனர். 

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது: இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து தரப்பினரும் கட்டாயம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்த பிறகு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என தெரிவித்தார். 

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 12 வயது குழந்தைகள் கூட கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். இப்படிப்பட்ட நெருக்கடி சூழ்நிலை இருப்பதால், கொரோனாவின் தீவிரம் எப்போது குறையும் என சுகாதாரத்துறையுடன் ஆலோசிக்க உள்ளோம். அதன் பின்னர் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் நடத்தப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.