நீங்கள் எப்படி போரிட வேண்டும் என்று கூறுவது எங்கள் வேலையல்ல என்பதுபோல், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு கூறுவது ராணுவத்தினரின் பணியல்ல என ப.சிதம்பரம் ஆவேசமாக பேசியுள்ளார். 

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் வரும் 31-ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை நடைபெற்றது பற்றி ராவத் மக்களை தவறான பாதையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல சமீபத்தில் எதிர்கட்சிகளை மறைமுகமாக விமர்சனம் செய்தார். இவரது பேச்சுக்கு இரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் எனக்கூறுவது ராணுவ தளபதியின் பணியல்ல என தெரிவித்தார். இதுதொடர்பாக, கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் ப.சிதம்பரம் இன்று பேசியதாவது: அரசை ஆதரிக்கும் வகையில் பேசும்படி டி.ஜி.பி. மற்றும் ராணுவ தளபதி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர் என்பது ஓர் அவமானம்.

ராணுவ தளபதி ராவத்திடம் நான் வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் ராணுவ தலைமை தளபதியாக இருக்கிறீர்கள். உங்களது வேலையில் நீங்கள் கவனம் வைத்திடுங்கள். அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டுமோ அதனை அவர்கள் செய்திடுவார்கள். நீங்கள் எப்படி போரிட வேண்டும் என்று கூறுவது எங்கள் வேலையல்ல என்பதுபோல், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு கூறுவது ராணுவத்தினரின் பணியல்ல. நீங்கள் உங்களது யோசனையின்படி போரிடுங்கள். நாட்டின் அரசியலை நாங்கள் கவனித்து கொள்வோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.