பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அபிநந்தனை வரவேற்க தயாராக இருந்த பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் வருகைக்கு இந்திய ராணுவம் தடை விதித்துள்ளது. 


பாகிஸ்தானில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அபிநந்தன் லாகூரில் இருந்து தரைமார்க்கமாக பஞ்சாப் எல்லையில் வாகா எல்லையை வந்தடைந்தார். அவருடன் பாகிஸ்தான் அதிகாரிகளும், இந்திய தூதரதக அதிகாரிகளும் உடன் வந்தனர். இந்திய வெளியுறவு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறார். அவரை வரவேற்க அத்தாரி பகுதியில் பெரும் அளிவிலான மக்கள் கூட்டம் திரண்டன. அபிநந்தனின்  பெற்றோர், மனைவி ஆகியோரும் அங்கு அங்கு காத்திருக்கின்றனர்.

அதேபோல் அபிநந்தனை ஏர்வைஸ் மார்சல் ரவி கபூர் வரவேற்க காத்திருக்கிறார். ராணுவ, விமானப் படை அதிகாரிகளும் அங்கு காத்திருக்கின்றனர். அபிநந்தனை வரவேற்கும் நிகழ்வையொட்டி வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லைக்கு செல்ல தயாராகி வந்தார். ஆனால் ராணுவம் அவரது வருகைக்கு தடை விதித்து விட்டது. 

வாகா எல்லையானது ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும்போது அங்கு அரசியல்வாதிகள் வந்தால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும். அதனை தவிர்க்கும் வகையில் முதல்வர் அமரிந்தர் சிங் வருகைக்கு அனுமதியளிக்க முடியாது என ராணுவத்தினர் விளக்கமளித்துள்ளனர்.