சென்னை முகப்பேரில் வாலிபரை ஓட ஓட  வெட்டி கொலை செய்ய முயற்சித்து மூன்று பேர் கொண்ட கும்பல் அட்டகாசம் செய்துள்ளது. இது அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது. தமிழகத்தில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை, ஆள்கடத்தில், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றஞ்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காவல் துறை இதனை தடுக்க எத்தனையே நடவடிக்கைகளை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில்  சென்னை முகப்பேரில் நேற்று இரவு கொடூர கொலை முயற்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அதாவது, சென்னை முகப்பேர் கிழக்கு ராஜரத்தினம் சாலை ரத்தினவேல் பாண்டியன் தெருவில் வசித்து வருபவர் ஜெகதீஷ் வ/24 தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணியளவில் ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஜெகதீசை வழிமறித்து ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர். அதல் ஜெகதீஸ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அவர் இறந்துவிட்டார் என கருத்திய அந்த கொலைவெறி கும்பல் அவரை அங்கேயே விட்டு மின்னல் வேகத்தில் தலைமறைவானது. 

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெகதீசை மீட்ட முகப்பேர் காவல்துறையினர் அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் யார், எதற்காக ஜெகதீஷை கொலை செய்ய முயற்சி செய்தனர் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜே ஜே நகர் காவல் ஆய்வாளர் பெருந்துரை முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.