போஸ்டரில் எம்ஜிஆர் படத்தை சிறியதாக்கியவர்கள் தான் தற்போது என்னை எதிர்க்கிறார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்;- ரஜினியுடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு பதில்சொல்லும் நேரம் இதுவல்ல. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பின்னணியில் பாஜக உள்ளதா என்ற கேள்விக்கு; அரசியலில் யாரும் என்னை இயக்கவில்லை. என்னை யாரும் இயக்கவும் முடியாது என்றார். போஸ்டரில் எம்ஜிஆர் படத்தை சிறியதாக்கியவர்கள் தான் தற்போது என்னை எதிர்க்கிறார்கள் என அதிமுகவை மறைமுகமாக தாக்கினார். எம்ஜிஆர் பற்றி நான் இப்போது பேசவில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே பேசியுள்ளேன். 

டார்ச் லைட் சின்னம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நியாயமான முறையில் போராடி பெறுவோம். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையாக டெண்டர் விடப்படும். லஞ்ச ஒழிப்பு மேல்மட்டத்தில் இருந்து தொடங்கப்படும். இளம்தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்கப்படும். தமிழகத்தில் இதுவரை இல்லாத அரசியலை நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் ஆசை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

அரசியலை மதவாதத்தில் இருந்து விடுவிக்க உருவானது தான் ஜனநாயகம். வழிபாட்டு தலங்களை முன்வைத்து சண்டையிடுவது தேவையற்றது. ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது, மக்களே ஆள வேண்டும் என்பதற்காக தான்; ஆட்சியாளர்கள் மக்களுக்கு சேவகர்களாக இருக்க வேண்டும். மக்களின் அன்பு மட்டும்தான் எங்களை ஆளும் எனவும் தெரிவித்துள்ளார்.