MGR. Jayalalitha and edappadi palanisamy

நம்மால் முதல்வர் பதவிக்கு வந்தவர், நமக்கு எதிராக செயல்பட ஆரம்பித்து விட்டாரே? என எடப்பாடிக்கு எதிராக கச்சை கட்ட தொடங்கினார் தினகரன்.

முதல்வர் என்ற பதவியில் தம்மை அமர்த்திவிட்டு, சுதந்திரமாக செயல்பட விடாமல் ஆட்டிப்படைக்கிறாரே என்று மனதுக்குள் புழுங்கினார் எடப்பாடி.

இதுவே தினகரனுக்கும், எடப்பாடிக்கும் இடையே பகை மூண்டதன் அடிப்படை காரணம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் தன்னிச்சையாக களமிறங்கியது இந்த விரிசலை இன்னும் அதிகமாக்கியது.

அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஒன்றிணைந்து தினகரனுக்கு எதிராக ஒரு கோஷ்டியை உருவாக்கினர். தினகரன் திகார் சிறைக்கு செல்வதற்கு முன் உருவான இந்த கோஷ்டி, அவர் ஜாமினில் வருவதற்குள் வலுவாகி விட்டது.

எடப்பாடிக்கு ஆதரவான இந்த அமைச்சர்கள் அணியில், திவாகரன் ஆதரவு அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும் சேர, கட்சி மற்றும் ஆட்சியில் எடப்பாடியின் கை ஓங்கி விட்டது.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தினகரன், திகார் சிறையில் இருந்து வந்த பின்னர், எம்.எல்.ஏ க்கள் சிலரை தம் பக்கம் அணி சேர்த்து கொண்டு, எடப்பாடிக்கு நெருக்கடி மேல் நெருக்கடி கொடுத்தார்.

இந்த விரிசல், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் இன்னும் அதிகமானது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் எடப்பாடியின் அணுகுமுறையை நேரடியாகவே விமர்சிக்க ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் விட்ட முதல்வர் எடப்பாடி, பின்னர் தமது ஆதரவு எம்.பி.ஹரி மற்றும் அருண்மொழி தேவன் மூலம், தம்பிதுரையின் பேட்டிக்கு கண்டனம் தெரிவித்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தார்.

அத்துடன், சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுப்பதன் மூலமே, கட்சி மற்றும் ஆட்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் இடம் பெற முடியும் என கொங்கு மண்டலம் வகுத்து கொடுத்த வியூகத்தையும் பின்பற்ற ஆரம்பித்து விட்டார் எடப்பாடி.

சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டை முன்னெடுத்த, பன்னீர்செல்வத்திற்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை கண்கூடாக கண்ட எடப்பாடி, அதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தார். நேரமும் வந்து விட்டது.

தமது ஆதரவு எம்.எல்.ஏ க்கள் முருகுமாரன், குன்னம் ராமச்சந்திரன் மூலம் நேற்று செய்தியாளர்களிடமும் எடப்பாடி அதை வெளிப்படுத்தி விட்டார்.

அதிமுக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, சசிகலா வாரிசு அரசியலை வளர்ப்பதால்தான் நாங்கள் அவரை ஏற்க மறுக்கிறோம் என்று குறிப்பிட்ட அவர்கள், ஒரு சாதாரண தொண்டனை துணை பொது செயலாளராக சசிகலா நியமித்திருந்தால் கூட ஏற்றுக்கொண்டிருப்போம் என்றனர்.

ஆனால், தமது உறவினரான தினகரனை நியமித்து விட்டார் சசிகலா என்று பேட்டியின் பொது அவர்கள் கொந்தளித்தனர். இதன்மூலம் சசிகலா எதிர்ப்பு அரசியலையும் எடப்பாடி கையில் எடுத்து விட்டார்.

அத்துடன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தினகரனை முன்னிறுத்த வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் தைரியமாக நிராகரித்தார் எடப்பாடி.

அதையும் மீறி தினகரன் மேலும் எதிர்ப்பை தீவிரமாக்கினால், அதை அவரது குடும்ப உறுப்பினர்கள் மூலமே முறியடிக்கும் திட்டத்தையும் ஏற்கனவே வகுத்து விட்டார்.

இனி, அனைவரும் விரும்பும் வகையில், மக்கள் நல திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி, மக்களோடு மக்களாக நெருங்குவதுடன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற வரிசையில் தன்னையும் நிலை நிறுத்தி கொள்வதே எடப்பாடியின் செயல் திட்டமாக உள்ளது.

அதிமுக பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? செல்லாதா? என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வரும் வரை, வழக்கம் போல அமைதியாக இருக்கும் எடப்பாடி, அதன் பின்னர் அதிரடியாக களமிறங்குவார்.

அப்போது கட்சியும், ஆட்சியும் ஒட்டுமொத்தமாக அவரது கட்டுப்பாட்டில் வரும். தினகரன், பன்னீர்செல்வம் போன்றவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப் படுவார்கள் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.