அதிமுக சார்பில் நடத்தப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. சபாநாயகர் தனபால் தலைமை வகிக்கும் இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் உருவப் படத்தைத் திறந்து வைத்து சிறப்பு உரையாற்றுகிறார். 

இவ்விழாவில் அழைப்பிதழில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் தினகரன் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போதில்லை என்று தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஸ்டாலின் பங்கேற்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் கருணாநிதியை முதல்வராக்கியது, கருணாநிதியுடன் எம்ஜிஆருக்கு இருந்த நட்பு ஆகியவற்றை ஸ்டாலின் மறந்துவிடக் கூடாது. மேலும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் அவர். இந்த விழாவில் திமுக புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்று தம்பிதுரை கூறியுள்ளார். அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தேசிய கட்சிகள் ஆட்சியை பிடித்திருக்கும் என்றும் கூறினார்.