ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஏற்கனவே சொல்லியிருந்தார். அதன்படி இன்று அமைப்பின் கொடியையும் பெயரையும் அறிமுகப்படுத்தினார்.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை துவக்கியுள்ளார் ஜெ.தீபா. மேலும் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களும் நடுவே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களும் பொறித்த கொடியை வெளியிட்டுள்ளார். தீபா வெளியிட்ட கொடியில் அண்ணாவின் படம் இல்லை.

மேலும் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

இந்த இயக்கம் பெருமளவில் வெற்றிபெற அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தொடர்ந்து தமக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

ஜெயலலிதா பிறந்தநாள் அன்று இந்த அமைப்பை அறிமுகம் செய்ததில் பெருமை அடைகிறேன்.

எனது அரசியல் பயணம் இன்று முதல் தொடங்குகிறது. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான்.

அதிமுக உணமையான தொண்டர்களுடன் போராடி இரட்டை இலையை மீட்பேன்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

துரோக கூட்டத்தில் இருந்து தமிழகத்தை மீட்டெடுப்பேன். நிலையான ஆட்சியை உருவாக்குவேன்.

ஏழைகள், விவசாயிகள், பெண்கள் முன்னேற கடைசிவரை பாடுபடுவேன்.

மக்கள் விரும்பியதால் அரசியலுக்கு வந்தேன். தாம் தொடங்கியது அமைப்பு தான். கட்சியல்ல.

சசிகலா மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. தம் குடும்பத்திற்கு தேவையானதை செய்துகொண்டிருந்தார்.

ஆர்.கே நகரில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். தீபக்கின் வெளிப்பாடு தெளிவற்ற நிலையில் உள்ளது. எதிலும் மக்களின் கருத்துக்களை கேட்டே முடிவெடுப்போம்.

என்னை நம்பிய தொண்டர்களை கடைசி வரை கைவிடமாட்டேன். எனக்கு ஆதரவளித்த தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.