போராட்டக்குழுவினர் ஓபிஎஸ் அறிக்கை பார்த்துவிட்டுத்தான் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்ததால் போராட்டம் தொடர்கிறது. அமைதியாக போராட்டம் நடந்தால் போலீசார் முழு பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.


போராட்டத்தை கைவிடுங்கள் . நிச்சயம் அரசு நல்ல முடிவெடுக்கும். முதல்வர் அறிக்கை அளிப்பார் என்று அமைச்சர்கள் கோரிக்கையை நிராகரித்த இளைஞர்கள் முதல்வர் ஓபிஎஸ் வரும் வரை போராட்டம் தொடரும் என முடிவெடுத்துள்ளனர்.


போராட்டம் நடக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கில் போலீசாரும் கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழு சொன்னபோது போராட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் பலத்த ஆதரவை எழுப்பினர்.


அவர்களுடன் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சங்கர் பேச்சு வார்த்தை நடத்தினார். பொதுமக்களுக்கு தொல்லையில்லாமல் போராட்டம் நடத்தினால் பாதுகாப்பு அளிப்போம் , காவல்துறை ஒத்துழைப்பு கொடுக்கும் , அல்லது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சர்வீஸ் சாலைக்குள் செல்லும் படி கேட்டு கொண்டார்.


ஆனால் இன்னும் இளைஞர்கள் கலைந்து செல்லாமல் காமராஜர் சாலையில் பிளாட்பாரத்தில் அமர்ந்துள்ளனர். முதலமைச்சர் அறிக்கை வந்த பிறகே கலைந்து செல்வதாக கூறி உறுதியாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.


 போலீஸ் தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 24 மணி நேரத்திற்கு மேல் போராட்ட களத்தில் நிற்கிறீர்கள் , கடும் பனி உள்ளது. ஒரு வேலை காலையில் அறிக்கை வர தாமதமானால் வெயில் அதிகமாக இருக்கும் அரசு உறுதி கொடுத்த பின்னர் இன்னும் போராட்டத்தை தொடர வேண்டுமா என்று பேசி வருகின்றனர்.


போராட்டக்காரர்களுக்கு போலீசார் சார்பில் சிற்றுண்டி மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.