மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு அளித்த அனுமதியை திரும்பபெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்று முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆய்வறிக்கைக்கு அளித்த அனுமதியை திரும்ப பெற மத்திய நீர்வள ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

குடிநீருக்காக மட்டுமே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்டப்போவதில்லை. மேலும் மேகதாது தடுப்பணை மூலம் அந்த பகுதியில் பாசன திட்டங்களை நிறைவேற்றவும் கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது என கடிதத்தில் எடப்பாடி கூறியுள்ளார். 

தமிழக அரசிடம் ஆலோசிக்காமல் மத்திய நீர்வளத்துறை கர்நாடக அரசு ஆய்வறிக்கை தயார் செய்ய அனுமதித்துள்ளது. மத்திய நீர்வளத்துறையின் நடவடிக்கை தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என முதல்வர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.