நீட் தேர்வுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி கூட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தற்போது திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற தடையையும் மீறி கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடையாது என உச்சநீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. 

மருத்துவ படிப்பில் சேர முடியாத காரணத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் திமுக தலைமையில் எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பல தலைவர்கள் திருச்சிக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், திமுகவின் பொதுக்கூட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதுமட்டுமன்றி, திருச்சி காவல்துறையும், உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

கூட்டம் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற நிலையில் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டம் நடைபெறும் என்று கூறினார்.

தடையை மீறி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். இந்த நிலையில், கண்டன பொதுக்குழு கூட்ட மேடைக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.

தற்போது திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.