மேயர் ரேஸில் கழட்டிவிடப்பட்ட 'மீனா ஜெயக்குமார்..' அதிருப்தியில் உடன்பிறப்புகள்.. என்ன நடந்தது ?
அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளரும், மகளிரணி துணைச் செயலாளராருமான மீனா ஜெயக்குமார் பெயர் வேட்பாளர் பட்டியல் இடம்பெறததால், கோவை மாவட்ட திமுகவில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுகவிற்கு அக்னி பரீட்சை போன்றது. ஏனெனில் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்று விளங்கும் அதிமுகவை தோற்கடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் முழுவதையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது. மொத்தமுள்ள 10 தொகுதிகளில் அதிமுக 9, பாஜக 1 என கைப்பற்றியது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவோர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் கோவை மேயராக அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளரும், மகளிரணி துணைச் செயலாளராருமான மீனா ஜெயக்குமார் பேர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் இடம்பெறவில்லை. இது கோவை மாவட்ட திமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மாநகராட்சி தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே திமுக சார்பில் நடந்த கூட்டங்களில் மீனா ஜெயக்குமார் தான் மேயர் வேட்பாளர் என திமுகவினர் மேடைகளில் பேசி வந்தனர். மீனா ஜெயக்குமாரும், கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்கும் கூட்டங்களில் தவறாமல் தலையை காட்டிவந்தார். திமுக கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வந்த நிலையில் திமுகவினரும் மீனா ஜெயக்குமாரை மேயர் வேட்பாளராக கருதி உரிய மரியாதை அளித்து வந்தனர்.
இதனிடையே மீனா ஜெயக்குமார் கோவை மாநகராட்சி 57 வது வார்டில் போட்டியிடுவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அப்பகுதியில் தேர்தல் அலுவலகம் திறந்ததோடு, தினமும் மக்களை நேரில் சந்தித்து வாக்கு துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று திமுக தலைமை அறிவித்த பட்டியலில் மீனா ஜெயக்குமாரின் பெயர் இடம் பெறவில்லை. மேயர் கனவுடன் 57 வது வார்டில் தீவிரமாக களப்பணியாற்றி வந்த மீனா ஜெயக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த பலருக்கும் இந்த முறை சீட் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியில் செல்வபுரம் உட்பட பல இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால் கோவை மாவட்ட திமுக எஸ்.பி வேலுமணியின் வியூகத்தை முறியடித்து கோவையை கைப்பற்றுமா ? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்து இருக்கிறது.