Asianet News TamilAsianet News Tamil

அப்படியொரு நிம்மதி! கண்களில் ஆனந்தக்கண்ணீர்! நானும் பாலம் கல்யாணசுந்தரம் ஐயாவும்.. SG சூர்யா நெகிழ்ச்சி பதிவு

தமிழகத்தை விட்டு வெளியே பயணித்ததே இல்லை பாலம் கல்யாணசுந்தரம் ஐயா. விமானம் ஏறியதே இல்லை. இவ்விரண்டையும் கொள்கையாக கொண்டுள்ளவர். பாரத பேரரசின் பத்மஶ்ரீ எனும் அங்கீகாரத்திற்காக தேசப்பற்றுடன் செவிசாய்த்து, தனது கொள்கையை தளர்த்தி புது டெல்லிக்கு விமானத்தில் வந்து பத்மஶ்ரீ விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக்கொண்டார் ஐயா.

Me and Padmashri Palam Kalyanasundaram Aiya..SG Surya Elasticity
Author
First Published Apr 6, 2023, 2:17 PM IST

ஜனாதிபதி மாளிகையில் விருதளிக்கும் விழாவில் ஐயாவுடன் கலந்துக்கொண்டு அவர் விருதை வாங்குவதை நேரில் பார்த்த போது என் வாழ்வில் ஏதோ ஒரு நல்ல காரியம் செய்து முடித்தது போல அப்படியொரு நிம்மதி என  SG சூர்யா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- வாழ்கையில் ஏதோ சாதித்தது போன்ற மனநிறைவான நாள் நேற்று. நான் கோவை PSG கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்துக்கொண்டு இருந்த போது நண்பர்கள் நாங்கள் நிறுவிய சிக்ஸ்த் சென்ஸ் பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பாக மாலை வேளை படிப்பகங்களை துவக்கி வந்தோம். மேட்டூர் பகுதியில் கேசவன் எனும் சமூக சேவகரின் கீர்த்தனா அறக்கட்டளையுடன் இணைந்து 5 படிப்பகங்களை நிறுவி 5 ஆண்டுக்காலம் தொடர்ந்து சேவை செய்தோம். மேட்டூரில் ஒரு படிப்பகத்தின் திறப்பு விழாவிற்காக 2010-ஆம் ஆண்டு சென்ற போது அந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பாலம் கல்யாணசுந்தரம் ஐயா அழைக்கப்பட்டு இருந்தார். 

Me and Padmashri Palam Kalyanasundaram Aiya..SG Surya Elasticity

இங்கு தான் கல்யாணசுந்தரம் ஐயாவை முதன்முதலில் சந்தித்தேன். முதன்முதலில் கேள்வியும் பட்டேன். அவர் குறித்து நிகழ்ச்சியில் செய்த அறிமுகம் என்னை தூக்கி வாரிப்போட்டது. இத்துனை சேவைகளை செய்த ஒருவரை நமக்கு தெரியவே இல்லையே என்று. சரியென்று அப்போது அவர் குறித்து Google செய்து பார்த்தபோது இணையத்தில் இரு தகவல் கூட கிட்டவில்லை. உடனடியாக அன்றைய தினமே ஐயாவின் வாழ்கையை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஐயாவின் வாழ்கையை ஆங்கிலத்தில் சுயசரிதையாக எழுத வேண்டும் என்று முடிவெடுத்தேன். 2011 மே மாதம் வரை சென்னைக்கு 5 முறை சென்று ஐயாவுடன் தங்கி, அவரின் வாழ்கையை ஆவணப்படுத்த துவங்கினேன்.

Me and Padmashri Palam Kalyanasundaram Aiya..SG Surya Elasticity

2011-ஆம் ஆண்டு சட்டப்படிப்புக்காக பூனே குடிபெயர்ந்து விட்டேன். அச்சமையம் எனது புத்தகத்திற்கான 35% பணி மட்டுமே முடிவடைந்து இருந்தது. 2014-ஆம் ஆண்டு சட்டப்படிப்பு முடித்த அடுத்த தினமே புது டெல்லி குடிபெயர்ந்து அங்கு ஒரு வருட காலம் வசித்தேன். முடியாத தொடர் கதையான எனது புத்தகம் ஒரு வழியாக 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. தொடர்ந்து 3 மாதம் கல்யாணசுந்தரம் ஐயாவுடன் சென்னையில் தங்கி, பயணித்து அவரது சுயசரிதையை ஒரு வழியாக எழுதி முடித்தேன். 2016-ஆம் ஆண்டு ஜீன் மாதம் சென்னையில் கல்யாணசுந்தரம் ஐயாவின் ஆங்கில சுயசரிதை புத்தகம் “Man of the Millennium” என்ற தலைப்பில் நடிகர் சிவகுமார், காந்தியடிகளின் உதவியாளர் மறைந்த கல்யாணம், நல்லி குப்புசாமி ஐயா போன்றோர் முன்னிலையில் சிறப்பான ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் வெளியானது. 

ஐயாவுடன் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நான் பயணித்து விட்டேன். ஐயாவின் சமூக பணியை முழுவதுமாக அறிந்துள்ள நான் ஐயா இந்நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் என்பதை தீர்க்கமாக நம்புபவன். ஊடக புகழோ, விருதுகளோ, செல்வமோ அவரை ஒரு நாளும் ஈர்த்ததில்லை. கோடிகளை அள்ளி கொடுத்து சேவை செய்தவராக இருந்தாலும், இன்றும் மிக சாதரணமாக வாழ்பவர். பத்மஶ்ரீ விருதுக்கு நான் அவர் பெயரை பரிந்துரை செய்கிறேன் என அனுமதி கேட்ட போதெல்லாம் திட்டவட்டமாக மறுத்து விட்டார். 2021-ஆம் ஆண்டு முதன்முறையாக அவரின் அனுமதியின்றி அவருக்கு தெரியாமல் பத்மஶ்ரீ விருதுக்காக அவரது பெயரை பரிந்துரை செய்து விண்ணப்பத்தை சமர்பித்தேன். 2022-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலில் ஐயாவின் பெயர் இடம்பெறவில்லை. 

Me and Padmashri Palam Kalyanasundaram Aiya..SG Surya Elasticity

எனினும், பிரதமர் மோடி அரசு பதவியேற்றவுடன் நிச்சயமாக கல்யாணசுந்தரம் ஐயா போன்ற தகுதியுள்ளவர்களுக்கு விருது நிச்சயமாக கிடைக்கும் என தீர்க்கமாக நம்பி 2022-ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு பத்மஶ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்து விண்ணப்பித்தேன். நான் நம்பியபடியே 2023 ஜனவரி 25-ஆம் தேதி ஐயாவின் பெயர் பத்ம விருது பட்டியலில் இடம் பெற்றது. எண்ணம் போல் வாழ்க்கை. என் ஆனந்தத்திற்கு அளவே இல்லை, ஐயாவுக்கு முதன்முதலில் இந்திய அரசின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவரால் நம்பவே முடியவில்லை. இது எப்படி சாத்தியமானது என குழம்பினார். விருது அறிவிக்கப்பட்டவுடன் நேரில் அவரை வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்து மகிழ்ந்தோம். 

பத்மஶ்ரீ விருது பெற்றதற்கு கூட இன்று வரை அவர் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. இந்திய அரசு அவரை அங்கீகரித்துள்ளது என்ற மகிழ்ச்சி தீர்க்கமாக இருந்தாலும், விருதுகளில் பெரிதாக விருப்பமில்லாதவர் என்பதால் இதை ஒரு சாதனையாக கருதவில்லை என்பதே நிதர்சனம். அனைத்தையும் விட நேற்று ஜனாதிபதி மாளிகையில் விருதளிக்கும் விழாவில் ஐயாவுடன் கலந்துக்கொண்டு அவர் விருதை வாங்குவதை நேரில் பார்த்த போது என் வாழ்வில் ஏதோ ஒரு நல்ல காரியம் செய்து முடித்தது போல அப்படியொரு நிம்மதி. கண்களில் ஆனந்தக்கண்ணீர்.

Me and Padmashri Palam Kalyanasundaram Aiya..SG Surya Elasticity

இந்த பிறவியில் எனக்கு ஆண்டவன் விதிக்கப்பட்ட ஒரு கட்டளையை, பொறுப்பை, கடமையை செவ்வனே செய்து முடித்தாற்போல ஒரு உணர்வு, மன நிம்மதி.. தமிழகத்தை விட்டு வெளியே பயணித்ததே இல்லை பாலம் கல்யாணசுந்தரம் ஐயா. விமானம் ஏறியதே இல்லை. இவ்விரண்டையும் கொள்கையாக கொண்டுள்ளவர். பாரத பேரரசின் பத்மஶ்ரீ எனும் அங்கீகாரத்திற்காக தேசப்பற்றுடன் செவிசாய்த்து, தனது கொள்கையை தளர்த்தி புது டெல்லிக்கு விமானத்தில் வந்து பத்மஶ்ரீ விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக்கொண்டார் ஐயா என அவரது முகநூலில் SG சூர்யா தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios