Asianet News TamilAsianet News Tamil

இனி ஜென்மத்துக்கும் வைகோவை பத்தி பேச தோணுமா? வன்னி அரசு'வை வச்சு செஞ்ச ஒரு லெட்டர்

எங்க தலைவர் வைகோ தலித்துகளுக்கு செய்தது என்ன தெரியுமா? வன்னியரசுக்கு பதில் என்ற தலைப்பில் ஈழவாளேந்தி என்கிற பெயரில் மதிமுக தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 

MDMK Wrote letter to vanni arasu
Author
Chennai, First Published Dec 7, 2018, 12:26 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அதில், திராவிட இயக்கத்தை வீழ்த்தத் துடிக்கும் சனாதன மதவெறிக் கும்பல் பிடியில் சிக்கியுள்ள சில காட்சி ஊடகங்கள், தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்ட முயலுகின்றன. இதன் ஒரு பகுதிதான் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன், தலைவர் வைகோ அவர்களிடம் நேர்காணல் எடுத்தபோது வெளிப்பட்டது.

நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடி வரும் திராவிட இயக்கத்தை, பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் மனுதர்ம முறையைத் தகர்த்து தவிடுபொடியாக்கி, மனித சமூக சமத்துவத்தை நிலைநாட்ட சமூகத் தளத்திலும், அரசியல் தளத்திலும், ஆட்சிப் பொறுப்பிலும் கடமை ஆற்றி வரும் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி விடலாம் என்று சில அறிவிலிகள் பகல் கனவு காணுகிறார்கள்.

நீதிக் கட்சியின் கொள்கை

1916 நவம்பர் 20 இல் தோற்றுவிக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி, தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர் அல்லாத அனைத்து சமூகங்களையும் கல்வி, சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் முன்னேறச் செய்வது என்று தனது நோக்கமாக அறிவித்தது.

பார்ப்பனர் அல்லாத மக்கள் என்றால் யார்? என்ற கேள்வி எழுந்தபோது, நீதிக்கட்சியின் பிதா மகன் டாக்டர் நடேசனார் மிகத் தெளிவாக அதற்கான வரையறையை வெளிப்படுத்தினார்.

குழப்பத்தை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களான பஞ்சமர்களை, தாழ்த்தப்பட்ட மக்களை பார்ப்பனரல்லாதவர்கள் பட்டியலிலிருந்து தவிர்த்துவிட முயன்றவர்களின் சதி டாக்டர் சி.நடேசனாரின் விளக்கத்தால் முறியடிக்கப்பட்டது.

பார்ப்பனரல்லாதார் யார்? என்று சென்னை சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்மீது உரையாற்றிய டாக்டர் நடேசனார், “பார்ப்பனரல்லாதார் என்றால் முஸ்லிம், இந்திய கிறிஸ்துவர், பார்ப்பனரல்லாத இந்துக்கள், ஜைனர்கள், பார்சிகள், ஆங்கிலோ இந்தியர் ஆகிய மற்றுமுள்ளோர் என்று பொருள்” என்று விளக்கமளித்தார்.

அதுவரை பார்ப்பனர் அல்லாதார் என்றால் சமூகத்தில் பார்ப்பனரை அடுத்த நிலையில் இருந்த மேல் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே என்றும், அதில் சமூகத்தில் கீழ் நிலையில் வைக்கப்பட்ட தீண்டப்படாத மக்களான தாழ்த்தப்பட்டவர்கள் இடம்பெற மாட்டார்கள் என்று பார்ப்பனர்களால் பரப்பப்பட்டு வந்த புரட்டு டாக்டர் நடேசனாரின் கூற்றால் அடித்து நொறுக்கப்பட்டது.

தலைவர் வைகோ

நீதிக்கட்சி அரசின் காலம் தொட்டு 1920 ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 98 ஆண்டுகளில் தமிழகத்தில் திராவிட இயக்க ஆட்சி சுமார் 68 ஆண்டுகள் நடைபெற்று வருகின்றது.

புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் அதன் செய்தி ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், ‘திராவிட இயக்கம் தலித் மக்கள் அரசியல் அதிகாரம் பெற என்ன செய்தது?’ என்ற கேள்விக்கு, ‘திராவிட இயக்க ஆட்சிகளில் நீதிக்கட்சி காலம் முதல் இன்றுவரையில் தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு எவ்வாறெல்லாம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன’ என்று சுருக்கமாக விளக்கம் அளித்தார் தலைவர் வைகோ.

மீண்டும் மீண்டும் அதே கேள்வியை திரும்ப எழுப்பியபோது தலித்துகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை திராவிட இயக்கம் வரவேற்கும். நானும் வரவேற்கிறேன் என்றுதான் வைகோ அவர்கள் பதில் கூறினார். ஒரு தலித் தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் வைகோவைவிட மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாது என்று வைகோ கூறினார்.

என் வீட்டில் தலித் பிள்ளைகள்தான் வேலைகளுக்கு உதவியாக உள்ளனர் என்று வைகோ கூறியதை வன்னியரசு திரித்துக் கூறுகிறார். தலித்துகளை வேலைக்காரர்கள் என்று வைகோ கூறியது சாதி ஆதிக்க மனப்பான்மை, நிலபிரபுத்துவமான சுபாவம், சாதி ஆணவப் போக்கு என வசைபாடியுள்ளார்.

வைகோவின் உதவியாளர்களான தலித்துகளை அவரது வீட்டில் அனைவரும் தங்கள் குடும்பத்துப் பிள்ளைகளாகவே மதித்து நடத்துகிறார்கள் என்பதை அனைவரும் அறிவர்.

ஆனால் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தபோது தனது 75 நிமிட நேர்காணலை முடித்துக் கொண்டு, சட்டையில் பொருத்தப்பட்டிருந்த ஒலி வாங்கியை எடுத்து வைத்துவிட்டு வைகோ, தனது வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

இதனை புதிய தலைமுறை, பாதியில் எழுந்து போய்விட்டதாக விளம்பர துண்டுப்படம் ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது.

திராவிட இயக்கத்தை சாய்க்க நினைக்கின்ற சனாதனக் கூட்டத்தின் கைப்பாவையாக மாறிய புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பின்னணியில் இருக்கும் சக்திகள் எவை என்று எங்களுக்குத் தெரியாதா?

புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் திட்டமிட்டு, குழப்பம் விளைவிக்க சிலர் கைக்கூலிகளை ஏவிவிட்டதை கண்டிக்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தலைவர் வைகோ அவர்கள் மீது வன்மத்தை கக்குவது என்ன வகையில் நியாயம்?

தனது முகநூல் மூலம் தலைவர் வைகோ அவர்களை ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கு எதிரானவராக சித்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட வன்னி அரசை, தலைவர் வைகோ அவர்கள் பெருந்தன்மையுடன் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இத்தகைய நடவடிக்கையை கடந்து சென்றுவிட முடியாது.

புதிய தலைமுறை நேர்காணலில் வைகோ, தன்னுடைய வீட்டில் தலித் பிள்ளைகள் பணியாளர்களாக இருக்கிறார்கள் என்று கூற முன் வந்ததற்குக் காரணம், எத்தகைய சாதி வேறுபாடும் பாரபட்சமும் எங்கள் குடும்பத்தில் இல்லை என்பதை சுட்டிக்காட்டவே எடுத்துக்காட்டாக கூறினார்.

ஆனால் அதனை வன்னி அரசு, ஆதிக்க மனப்பான்மை, நிலப்பிரபுத்துவ உளவியல் என்று கூறுவது அவரது அறியாமையைக் காட்டுகிறது என்று கருதுவதைவிட, புதிய தலைமுறையை ஏவியவர்களிடம் இவரும் சிக்கிவிட்டாரா? என்ற கேள்விதான் எங்களுக்கு எழுகிறது.

தலைவர் வைகோ அவர்களின் பொதுவாழ்க்கையை புரிந்தவர்கள், அருகில் இருந்து உணர்ந்தவர்கள் அவரது சமூக சமத்துவ மனப்பான்மையை நன்கு அறிந்திருப்பார்கள். தந்தை பெரியாரின் சமூக சமத்துவக் கொள்கையை நெஞ்சிலே தாங்கி 54 ஆண்டுகளாக அரசியலில் பொதுத் தொண்டு ஆற்றி வரும் வைகோ அவர்கள், சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டவர். ஒடுக்கப்பட்டோர் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஓங்கி வளர வேண்டும் என்ற சிந்தனை உடையவர். நாடாளுமன்றத்தில் 22 ஆண்டுகள் இடம்பெற்று ஜனநாயகப் பணி ஆற்றிய வைகோ, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மீதும் அவரது சிந்தனைகள், கோட்பாடுகள் மீதும் ஆழமான பற்றுக் கொண்டவர்.

நாடாளுமன்றத்தில் விடுதலைக்குப் போராடிய தலைவர்கள் படம் எல்லாம் மாட்டப்பட்டு இருக்கிறது! எந்த மைய மண்டபத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அரசியல் அமைப்புச் சட்டத்தை வடித்தெடுத்து நிறைவேற்றி தந்தாரோ அவரது திருஉருவப்படம் ஏன் நாடாளுமன்றத்தில் திறக்கப்படவில்லை? தீட்டுப்பட்டு விடுமோ? என்று வைகோ கேள்வி எழுப்பினார்.

அதன் பின்னர்தான் 1990 இல் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக பொறுப்பேற்ற காலத்தில் அம்பேத்கர் திருவுருவப் படம் நாடாளுமன்றத்தில் திறக்கப்பட்டது. இது வரலாறு.

அன்னை இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இருந்த மூத்த தலைவர் பாபு ஜெகஜீவன்ராம் உத்திரபிரதேசத்தில் சம்பூரானந்தர் சிலையைத் திறந்து வைத்தார். சிலை திறப்பு முடிந்ததும், கங்கையில் இருந்து புனித நீர் கொண்டு வந்து சம்பூரானந்தர் சிலைக்கு தீட்டுக் கழித்தனர். இதனைக் கண்டித்து பின்னாளில் நாடாளுமன்றத்தில் முழங்கியவர் வைகோ.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, நாடு போற்றும் நல்ல இசைவாணராக, மேஜஸ்ட்ரோ விருது பெற்ற மாபெரும் இசைக்கலைஞர், இளையராஜா அவர்கள் டெல்லி அரசால் புறக்கணிக்கப் பட்டபோது, நாடாளுமன்றத்தில் வெகுண்டு எழுந்தார் தலைவர் வைகோ.

1994, மே 6 இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களை அமர்த்தி அழகு பார்த்தவர் வைகோ.

வாழ்நாள் எல்லாம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா திராவிட இயக்க இலட்சியங்களுக்காக வாழ்ந்து அண்ணல் அம்பேத்கர் சிந்தனைக் கருத்துக்களை நாடெங்கும் பரப்பிய தத்துவக் கவிஞர் ஓலைக்குடிசையில் வாழ்ந்து மறைந்து போனார். அவரது இரங்கல் கூட்டத்தில் ஓலைக்குடிசையை மாற்றி மாடிக்கட்டிடம் கட்டித் தருவோம் என்று வைகோ வாக்குறுதி அளித்தார். வாக்குறுதி அளித்ததை நிறைவேற்றும் வகையில் குடியரசின் பிள்ளைகள் வாழ்வதற்கு 8 வீடுகள் கட்டித் தந்த பெருமை, தமிழகத்து வரலாற்றில் தலைவர் வைகோ அவர்களுக்கு மட்டுமே உண்டு.

தனது இல்லத்தில் பணிபுரியும் ஊழியர் சந்துருவுக்கு தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வீடு கட்டிக் கொடுத்து, அதனை திறப்பதற்கு இடதுசாரி தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் தலைவர் மற்றும் பல இயக்கங்களை சேர்ந்த தலைவர்களை அழைத்து விழா கொண்டாடியவர் வைகோ.

பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரை பலி கொடுக்கும் வகையில் ஊசலாடிக் கொண்டிருந்த தேவேந்திரகுல இளைஞனை அரசு மருத்துவமனையில் பார்க்க போனபோது, மதுரை அரசினர் மருத்துவர்களின் சிகிச்சை திருப்தி இல்லாததால் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கச் செய்து, அந்த இளைஞன் உயிரை காப்பாற்றியவர் வைகோ. உயிர் பிழைத்த அந்த இளைஞன் தன்னையே சுற்றிச் சுற்றி வந்தபோது அவரை தன் உதவியாளராக ஏற்றுக் கொண்ட பெருந்தகைதான் தலைவர் வைகோ அவர்கள்.

சாதி ஆணவக் கொலைகளை தயவு தாட்சணியம் இன்றி வன்மையாகக் கண்டிப்பவர் வைகோ என்பதை வன்னி அரசு மறந்தாலும் அல்லது மறைத்தாலும் நாடு மறக்காது. உடுமலையில் பட்டப்பகலில் சங்கர் வெட்டிச் சாய்க்கப்பட்டு பலி ஆனார். அவரது காதல் மனைவி கௌசல்யாவும் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். சாதி மறுப்புத் திருமணம் புரிந்த காரணத்திற்காக சாதி ஆதிக்க வெறியர்கள் நடத்திய இந்த வெறியாட்டத்தைக் கடுமையாக கண்டனம் செய்தது மட்டுமின்றி, மருத்துவமனைக்குச் சென்று கௌசல்யாவை சந்தித்து ஆறுதல் கூறியவர் வைகோ.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த நந்தீஷ் - சுவாதி இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். கர்நாடக மாநிலத்தில் சிவன சமுத்திர நீர் வீழ்ச்சியில் அவர்களது உடல்கள் வீசி எறியப்பட்டன.

இத்தகைய ஆணவக் கொலைகளை செய்வோர் நாகரீக மனித சமூகத்தில் வாழவே தகுதி அற்றவர்கள். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அறிக்கை தந்தவர் தலைவர் வைகோ.

வன்னி அரசு நெஞ்சில் கை வைத்துச் சொல்லட்டும் இத்தகைய தலைவர் வைகோ, நிலப்பிரபுத்துவ உளவியல் கொண்டவரா? அப்படி இருந்தால் சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக குரல் எழுப்புவாரா?

மயிலாடுதுறை ஒன்றிய மதிமுக செயலாளர் குங்பூ செல்வம் திடீரென்று உடல்நலக்குறைவால் மறைந்து போனார். வளர்ந்து ஆளான மூன்று பிள்ளைகள், மனைவியுடன் ஓலைக்குடிசை வீட்டில் வசித்த ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த செல்வம் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தலைவர் வைகோ, செல்வம் குடும்பத்திற்கு வீடு கட்டித் தருவதாக அறிவித்துவிட்டு வந்திருக்கிறார்.

இவை எல்லாவற்றிலும் மேலாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன், ஆற்றல் மிகுந்த இளம் தலைவர் என்று பொதுவெளியில் நெஞ்சார புகழ்ந்து பாராட்டிய தலைவர் தமிழ்நாட்டில் வைகோ என்பதை வன்னி அரசு எப்படி மறந்தார்?

மக்கள் நலக் கூட்டணியில் ‘திருமா’வின் பெருமைகளை ஊர் ஊராக சென்று எடுத்துரைத்து வாழ்த்தியவர் தலைவர் வைகோ என்பதை மறந்துவிட்டீர்களா?

நான் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு போய்க் கொண்டிருக்கிறேன். திருமாவளவன் போன்ற இளம் தலைவர்கள் எதிர்கால தமிழகத்தை வழி நடத்துவார்கள் என்று வாயார போற்றிய தலைவர் மீது ஆதிக்க மனப்பான்மை என்று சேறு வாரி வீசிட வன்னி அரசுக்கு எப்படி மனம் வந்தது?

கடந்த வாரம் சிவகாசியில் நடந்த மத்திய சென்னை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் செல்லத்துரை இல்லத் திருமணத்தில், திருமாவளவனை வைத்துக் கொண்டு, திருமா ஒரு சமூகத்தின் தலைவர் இல்லை; தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர் என்று பாராட்டிய தலைவர் வைகோ, வன்னி அரசுவின் ‘காமாலை’ கண்களுக்கு ஆதிக்கச் சாதி உளவியல் கொண்டவராக தெரிகிறார்?

தமிழ்நாட்டில் சாதி, மத வெறி சனாதனக் கூட்டத்தின் ஆதிக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற, திராவிட இயக்கம் - இடதுசாரிகள் - இஸ்லாமிய இயக்கங்கள் - விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய நேரத்தில், ஆதிக்க சக்திகளின் உள்நோக்க அரசியலுக்கு வன்னி அரசு போன்றவர்கள் பலி ஆவது பரிதாபத்துக்கு உரியதாகும்.

தன்நெஞ்ச றிவது பொய்யற்க – பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

என்னும் குறள் மொழியை ‘வன்னி அரசு’ போன்ற வளரும் இளைஞர்கள் மறந்துவிடக் கூடாது.

- ஈழவாளேந்தி

Follow Us:
Download App:
  • android
  • ios