இந்தியாவில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில், கொரோனாவை தடுக்க  மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும், தூய்மை பணியாளர்களும் மக்களுக்காக களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தங்களது உயிரையும் பணயம் வைத்து மருத்துவர்களும் செவிலியர்களும் மக்களை காக்க பணியாற்றிவரும் நிலையில், சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது, பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.

சென்னையில் நேற்று இந்த சம்பவம் நடப்பதற்கு முன், மேட்டுப்பாளையத்திலும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்தது. கொரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய, அந்த பகுதியில் வசித்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதில் தொடர்ந்து பிரச்னை இருந்துவரும் நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களிடமிருந்து கொரோனா பரவாது என்று அரசு தரப்பிலும் மருத்துவத்துறை தரப்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இதற்கிடையே, உயிரிழந்தவர்களை மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களிடமிருந்து கொரோனா தொற்று பரவாது. அதனால் மக்கள், கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டது. 

இந்நிலையில், இதுபோன்ற மோசமான சம்பவங்களை அறிந்தவுடன், கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தனது, ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இடம் தர முன்வருவதாக விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈஸ்வரன், கோவைக்கு அருகில் உள்ள தனது ஒரு ஏக்கர் நிலத்தை, கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய வழங்க தயாராக இருப்பதாகவும், வேண்டுமென்றால் அதை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.