Asianet News TamilAsianet News Tamil

TN Fishermen : தமிழக மீனவர் என்றால் இப்படி… வேறொருவர் என்றால் ? பாஜகவை கண்டித்த வைகோ

 

தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டால், கண்டுகொள்ளாத பாஜக அரசு வேறொருவர் பாதிக்கப்பட்டால் மட்டும் உடனே உதவி செய்வது ஏன் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் வைகோ. 

 

Mdmk leader vaiko statement about tn fishermen issue and bjp govt attack
Author
Tamilnadu, First Published Dec 20, 2021, 2:06 PM IST

தமிழ்நாட்டு மீனவர்கள் 55 பேரை, நேற்று இலங்கைக் கடற்படை கைது செய்தனர். அவர்களுடைய 6 மீன்பிடிப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதற்குக் கண்டனம் தெரிவித்து மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘1980-களில் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களில், 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று விட்டது.

Mdmk leader vaiko statement about tn fishermen issue and bjp govt attack

அன்று முதல் இன்று வரையிலும், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும்நான் கேள்விகள் கேட்டு வருகிறேன். நடப்பு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் கூட, நான் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் விளக்கம் அளித்தார். இலங்கை பிரதமருடன் இந்திய பிரதமர் பேசினார்; வெளியுறவு துறை அமைச்சர், இலங்கைக்குச் சென்று பேசினார்; 5ஆவது சுற்று பேச போகின்றோம் என, அயல் உறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் கூறினார். இதுவரை நடந்த பேச்சுகளில் என்ன தீர்வு கண்டீர்கள்? இனி எதற்காகப் பேச வேண்டும். 

Mdmk leader vaiko statement about tn fishermen issue and bjp govt attack

குஜராத் மீனவர் ஒருவரை, பாகிஸ்தான் கடற்படை தாக்கியது என்றவுடன், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை, அயல் உறவுத் துறை அமைச்சகத்துக்கு வரவழைத்து, கண்டனத்தைப் பதிவு செய்கின்ற பாஜக அரசு, தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற இலங்கைத் தூதரை அழைத்து எச்சரிக்கை செய்யாதது ஏன்? இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இழப்பு ஈடு எதுவும் பெற்றுத் தந்தது இல்லை. 

அந்தக் கோரிக்கையைப் பலமுறை வலியுறுத்தியும் பயன் இல்லை. கேளாக் காதினராக ஒன்றிய அரசு இருக்கின்றது. ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற மாற்றாந்தாய் மனப்போக்கைத்தான் அரசு கடைப்பிடித்து வருகின்றது. பாஜக அரசு தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை; தீர்வு எதுவும் இல்லை; இந்தியக் கடற்படை தன் கடமையைச் செய்யவில்லை. 

Mdmk leader vaiko statement about tn fishermen issue and bjp govt attack

லண்டனில் உள்ள லிபிய நாட்டுத் தூதரகக் காவலர்கள், தவறுதலாக இங்கிலாந்து காவலர் ஒருவரைச் சுட்டுக்கொன்றதற்காக, அந்த நாட்டுடன் தூதரக உறவுகளை உடனே முறித்துக் கொள்வதாக இங்கிலாந்து நாடு உடனே அறிவித்தது. நேற்று இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்த 55 மீனவர்களை இன்றைக்கே விடுதலை செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், இலங்கை அரசுடன் தூதரக உறவுகளை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்; தமிழக மீனவர்களுக்கு இழப்பு ஈடு பெற்றுத் தருவதற்கு, பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசு மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios