ஜனநாயக நாட்டில், கருத்து உரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை ‘தேசத்துரோகிகளாக’ சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம். இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


கும்பல் கொலையைத் தடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்துறையைச் சேர்ந்த 49 பேர் கடிதம் எழுதினர். இந்தக் கடிதம் எழுதியவர்கள் மீது நீதிமன்ற உத்தரவுப்படி பீகார் மாநில போலீஸார் தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

 
இந்தியா முழுவதும் நாள்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் கொல்லப்படுவதையும் பாஜக அரசும் பிரதமர் மோடியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கக்கூடாது என்று எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்ட 49 பேர் பிரதமருக்கு வெளிப்படையாக மடல் எழுதினர்.
அக்கடிதத்தில், ‘வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தின் பெயரால், சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றார்கள். தலித் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கத்திற்காகவும் பசு வதை என்கிற பெயராலும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகுந்த வேதனை தருகிறது. தலித் மற்றும் சிறுபான்மையினரை தாக்குவோர் மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.
பிரதமருக்கு கடிதம் தீட்டிய அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் 49 பேர் மீது புகார் கூறி சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், பீகார் மாநில காவல்துறை பிரதமருக்கு மடல் தீட்டிய 49 பேர் மீதும் தேசத்துரோகம், பொதுத்தொல்லை, மத உணர்வுகளைப் புண்படுத்துதல், சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
நாட்டில் மத சகிப்புதன்மை தொடர வேண்டும். சிறுபான்மை தலித் மக்கள் மீது மதவாத சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்தி கொலை செய்வதைத் தடுக்கவேண்டும் என்று பிரதமருக்குக் கோரிக்கை வைத்து மடல் எழுதியதற்காக, தேசத்துரோக சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
ஜனநாயக நாட்டில், கருத்து உரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை ‘தேசத்துரோகிகளாக’ சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம். இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் வைகோ  தெரிவித்துள்ளார்.