நான் எப்போதும் எனக்காக பதாகைகள் வைக்கச் சொல்லியதில்லை என்று வைகோ சொல்லி முழுசா மூணு நாளு கூட ஆகல அதுக்குள்ளே பேனரை எடுக்க சொன்ன அரசு ஊழியரை மதிமுகவினர் மரண காட்டு காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மதிமுக. முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக மதிமுக. கொடிகள் கட்டப்பட்டிருந்தன. சைதாப்பேட்டை தாதண்டன் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த மதிமுக கொடிகள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டன. உதவி செயற்பொறியாளர் வரதராஜ் மற்றும் ஊழியர்கள் கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மதிமுகவினர் என்ஜினீயர் வரதராஜை அதிபயங்கரமான தாக்கினார். இதில் காயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சைதாப்பேட்டை போலீசில் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை முயற்சி, கும்பலாக கூடுதல், ஆயுதங்களால் தாக்குதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து உதவி கமி‌ஷனர் அனந்த ராமன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று இரவு ஸ்பென்சர் பிளாசா அருகே காரில் வந்துகொண்டிருந்த மதிமுக மாசெ சுப்பிரமணியனை சுமார் 100 போலீஸார் வழிமறித்து அப்படியே போலீஸ் வாகனத்தில் ஏற்றி திருவொற்றியூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர். வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் சுப்பிரமணி.  அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தாக்குதல் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட செல்போன் வீடியோவை வைத்து பயங்கரமாக தாக்கிய மற்றவர்களையும் அடையாளம் காணும் வேலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மேலும் மதிமுகவினர் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.