ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் எம்பிபிஎஸ் கட்டணமாக ஆண்டுக்கு 22 லட்சம் வசூலித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட 13 லட்சத்தை விட அதிகமான தொகையை வசூலித்துக்கொள்ள அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் எம்பிபிஎஸ்க்கு ஆண்டு கட்டணமாக 13 லட்சம் வசூலித்துக் கொள்ளலாம் என இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகம் வழக்குத்தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணையில் உச்ச நீதிமன்றம் பல்கலைக் கழக மானியக்குழு கட்டணம் குறித்து இறுதி முடிவு எடுக்கும் வரை ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டைப் (2017)போலவே ஆண்டுக்கட்டணமாக 22லட்சம் வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து மற்ற நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களும் இதுபோன்று தாங்களும் வசூலித்துக்கொள்ள அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிகிறது.

உச்சநீதிமன்றம் ஜூன் 30ம் தேதியன்று மருத்துவக்கட்டணம் குறித்து ஆராய ஒரு குழு அமைத்து அதன் அறிக்கையை 6 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உத்தரவிட்டது.

பல்கலைக்கழக மானியக்குழு ரூ.22 லட்சத்தையே கட்டணமாக நிர்ணயித்தால் மாணவர்கள் இன்னும் கூடுதலாக 50 லட்சம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் முதல் கட்டமாக மாணவர்கள் ரூ.13 லட்சம் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு இவ்விசயத்தில் இறுதி முடிவு எடுத்து கட்டணத்தை நிர்ணயித்த பின்னர், அது ரூ.13 லட்சத்தை விட அதிகமாக இருந்தால் மீதிக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.