உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு மீண்டும் நேரடித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் வேகப்படுத்தியுள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் பதவிகள் குறித்த அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் போட்டியிடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
இந்த அறிவிப்பின் மூலம் மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த 1996, 2001 ஆகிய ஆண்டுகளில் மேயர் பதவிக்கு நேரடி தேர்தல் நடைபெற்றது. ஆனால், 2006-ல் மேயர் பதவியை வார்டு கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யும் நடைமுறையை திமுக அரசு கொண்டு வந்தது. ஆனால், 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் மேயர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் என சட்டம் கொண்டுவந்து மாற்றினார். ஆனால், 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரானபோது, 2006-ல் திமுக செய்ததை போல மேயர் பதவி, கவுன்சிலர்கள் மூலமாகவே தேர்வு செய்யப்படும் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தார்.


ஆனால், தற்போதைய அதிமுக அரசு, ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் கடந்த ஆண்டு மாற்றம் செய்தது. இதன்படி தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், மேயர் பதவிக்கு நேரடித் தேர்தலா அல்லது கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்வதா என்ற கேள்வி எழுந்திருந்தது. தற்போது மேயர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.  மாநகர பகுதிகளில் கவுன்சிலருக்கும் மேயருக்கும் என இரண்டு வாக்குகளை வாக்காளர்கள் செலுத்த வேண்டும்.