கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. மே 31ம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், கடும் துயரத்திற்கு ஆளாகியிருப்பது புலம்பெயர் தொழிலாளர்கள் தான். ஊரடங்கால் வேலையும் இல்லாமல், அதனால் வருமானமும் இல்லாமல் தவித்ததுடன், சொந்த ஊர்களுக்கு திரும்பவும் முடியாமல் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் தங்களுக்கான முறை வரும்வரை காத்திருக்காமல் நிறைய பேர் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். உணவு இல்லாமல் பசியும் பட்டினியுமாக பலர் நடந்து செல்கின்றனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட, பலர் நடந்துசெல்வதை தவிர்க்க முடியவில்லை. நடந்து செல்லும் வழியில் ரயிலில் அடிபட்டு சிலர் இறந்த அவலங்களும் நடந்துள்ளன. 

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் அரசியல் செய்துவருகிறது. ராகுல் காந்தி, புலம்பெயர் தொழிலாளர்களுடன் பேசும் வீடியோவெல்லாம் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தை வைத்து, பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் அரசியல் செய்யும் நிலையில், உண்மையாகவே புலம்பெயர் தொழிலாளர்களின் துயரத்திற்கு காங்கிரஸ் தான் காரணம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, புலம்பெயர் தொழிலாளர்களின் துயரத்திற்கு காங்கிரஸ் தான் காரணம். சுதந்திரத்திற்கு பின், மத்தியிலும் பல மாநிலங்களிலும் நீண்டகாலம் ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் தான். காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தபோது அந்தந்த மாநிலங்களிலும் கிராமங்களிலும் நகரங்களிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருந்தால், மக்கள், ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு புலம்பெயர வேண்டிய அவசியமே இருந்திருக்காது. 

எனவே பிழைப்புக்காக மக்கள் புலம்பெயர்ந்ததற்கு காங்கிரஸ் தான் காரணம். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் புலம்பெயர் தொழிலாளர்களும் பேசும் வீடியோக்கள் வெளியாகின்றன. ஆனால் உண்மையாகவே அவர்களில் எத்தனை பேருக்கு காங்கிரஸ் உதவியிருக்கிறது என்று தெரிவிக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் மீதான காங்கிரஸின் அக்கறை உண்மையாக தெரியவில்லை. காங்கிரஸ் நாடகம் ஆடுகிறது. 

தற்போது மத்தியில் ஆளும் பாஜகவும், காங்கிரஸ் கட்சியின் அடிச்சுவட்டை பின்பற்றாமல், சொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவரவர் ஊர்களிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்று மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.