கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் வரை தேமுதிகவிற்கு இருந்த கிராக்கி, அண்மைக்காலத்தில் தமிழகத்தில் வேறு எந்த கட்சிக்கும் இருந்தது இல்லை. தேமுதிகவை எப்படியாவது கூட்டணியில் சேர்த்துவிடுவது என்பதில் அப்போது திமுக தலைவராக இருந்த கலைஞர் உறுதியுடன் இருந்தார். திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்றன. இதே போல் தேமுதிகவை அப்போது புதிதாக உருவாகியிருந்த மக்கள் நலக்கூட்டணியில் சேர்க்கவும் பிரம்ம பகீரதம் நடைபெற்றது. இறுதியில் தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் அங்கமானது. விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராகவும் அறிவித்தனர்.

ஆனால் போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் தேமுதிக தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்தது. உளுந்தூர் பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்தும் தோல்வியை தழுவினார். இதன் பிறகு தமிழக அரசியலில் தேமுதிக ஓரங்கட்டப்பட்டது. 2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தேமுதிகவை சேர்த்துக் கொள்ள எந்த கூட்டணியும் ஆர்வம் காட்டவில்லை. 3 தொகுதிகள் தருவதாக அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் 9 தொகுதிகள் என்று தேமுதிக பிடிவாதம் பிடித்ததால் அந்த கட்சியை விட்டுவிட்டு பாஜக, பாமகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டது அதிமுக.

இதனை தொடர்ந்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்று தேமுதிக சங்கடங்களை சந்தித்தது. அதன் பிறகு பாஜக தலையிட்டு தேமுதிகவிற்கு 4 தொகுதிகளை வாங்கிக் கொடுத்தது. வழக்கம் போல் அந்த நான்கு தொகுதிகளிலும் தேமுதிக தோல்வியை தழுவியது. இப்படி கடந்த 2011க்கு பிறகு தேமுதிக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்து வருவதால் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க திமுக – அதிமுக பெரிய அளவில் தற்போதும் ஆர்வம் காட்டவில்லை. மேலும் தேமுதிகவின் பலமே அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தான். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வெளியே நடமாட முடியாத நிலையில் உள்ளார். மேலும் தேமுதிகவிற்கு என்று தற்போது 2 விழுக்காடு வாக்குகள் இருந்தாலே பெரிய விஷயம் என்கிறார்கள்.

எனவே அதிமுக கூட தேமுதிகவை தற்போது கண்டுகொள்ளவில்லை. அதே சமயம் பிப்ரவரி மாதம் பேசலாம் என்று மட்டும் தகவல் அனுப்பியுள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயம் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் நன்றாக இருக்கும் என்று கருதும் திமுக தேமுதிகவை வளைத்துப்போட முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த முறைகளை போல் பேரம் எல்லாம் கிடையாது கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சுதிஷை திமுக தரப்பில் இருந்து முக்கிய பிரமுகர் ஒருவர் தொடர்பு கொண்டதாக கூறுகிறார்கள்.

இது குறித்து சுதீஷ் பிரேமலதாவிடம் எடுத்துரைத்ததகாவும் ஆனால் வழக்கம் போல் பிரேமலதா திமுக கூட்டணியில் ஆர்வம் இல்லாமல் பேசுவதாகவும் சொல்கிறார்கள். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சொல்லித்தான் அதிமுக கூட்டணியில் இணைந்தோம். ஆனால் தற்போது வரை பாஜக நமக்கு மாநிலங்களவை எம்பி பதவியை தரவில்லை. ஆனால் ஜி.கே.வாசனுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த தேர்தலிலும் பாஜகவுடன் இருந்தால் நிச்சயம் ராஜ்யசபா பதவி கிடைக்கும் பிறகு மத்திய அமைச்சராகிவிடலாம் என்று சுதீஷிடம் பிரேமலதா கூறியதாகவும், திமுகவுடன் சென்றால் எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைப்பார்கள் என்றும் லாஜிக் பேசியதாக சொல்கிறார்கள்.

இப்படித்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் முதலிலேயே பேசாமல் அதிமுகாவிற்கு காத்திருந்து அவமானப்பட நேர்ந்தது. தற்போதும் அதே தவறை தேமுதிக செய்துவிடக்கூடாது என்றே அக்கட்சி நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர்.