மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை சென்னையில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு  ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

முக்கியமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் வாதிகள் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இந்நிலையில்,  மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சளி தொல்லை இருந்ததையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் திருமுருகன் காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.