ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனன் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது.

இதில் சசிகலா தரப்பில், டி.டி.வி. தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், தீபா பேரவை சார்பில் தீபாவும், திமுக சார்பில் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும், சமக சார்பில் அந்தோணி சேவியரும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என 127 பேர் மனுதாக்கல் செய்தனர்.

நேற்று மட்டுமே 72  பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதற்கான மனு பரிசீலனை ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் தண்டையார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த பரிசீளைனையில், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்பு மனு ஏற்கனவே ஏற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சமக வேட்பாளர் அந்தோணி சேவியர் மற்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமக மாற்று வேட்பாளர் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பரிசீலனை செய்யப்பட்ட ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனனின் மனு ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அதிகார பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.