மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து கொள்ளைடித்தனர்.

.

இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரது தூண்டுதலின் பேரிலேயே  அவர்கள் கொலை-கொள்ளையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

முக்கிய ஆவணங்களை கனகராஜ் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் மர்மமான முறையில் கார் விபத்தில் பலியானார்.இந்த கொள்ளை சம்பவத்தில் கைதான கேரளாவை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ‌சயனின் மனைவி, மகள் ஆகியோரும் விபத்தில் பலியானார்கள். ‌ஷயான் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்படி 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த 11-ந்தேதி தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல், கோடநாடு வழக்கின் குற்றவாளியான ‌சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர்.

அப்போது கோடநாடு கொலை தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர்.  அதில் இந்த கொலைகளுக்குப் பின்னனியில் இருப்பது முதலமைச்சர் என குற்றம்சாட்டினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தன் மீதான இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.

இவ்வழக்கு தொடர்பாக  டெல்லி சென்று சயன் மற்றும் மனோஜைக் கைது செய்த தமிழக போலீசார் அவர்களை .சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி  சரிதா முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

சயன், மனோஜ் மீதான விசாரணை நீதிபதி முன்பு 4 மணிநேரம் நடைபெற்றது.  விசாரணையின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார். 

தமிழக போலீசார் சயன் மற்றும் மனோஜ் இருவரையும் சிறையில் அடைக்க எவ்வளவோ முயன்றும்  நீதிபதி மறுத்துவிட்டார். இந்நிலையில் கோடநாடு மர்ம கொலைகள் தொடர்பாக அடுத்த அஸ்திரத்தை மேத்யூஸ் சாமுவேல் வீச உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஆளும் தரப்பை அதிரச் செய்துள்ளது.