திமுகவில் செந்தில்பாலாஜி இணைவது உறுதியாகி விட்ட நிலையில், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் சிலருக்கும் அவர் வலைவிரித்து வருவதால் அமமுக கூடாரம் அலறித்துடிக்கிறது.

செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது தொடர்பான செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ’மிஸ்டர் கூலாக’ பட்டம் வாங்கிய டி.டி.வி.தினகரனுக்கு திணறத் திணற அதிர்ச்சி கொடுக்கத் தயாராகி வருகிறார் செந்தில் பாலாஜி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். கரூரில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் செந்தில் பாலாஜி கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தனக்கு நெருக்கமானவர்களிடம் திமுகவில் இணைவது குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். 

1996ல் திமுகவில் இருந்துதான் அதிமுகவிற்கு வந்தேன். இக்கட்டான சூழ்நிலையில் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்து விடலாம் என்று மனம் விரும்பியது. அதற்கு ஏற்றாற்போல தி.மு.க.வில் என்னைத் தேடி வாய்ப்பு வந்தது. வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது. தி.மு.க.வில் என்னை இணைத்து கொள்ளப்போகிறேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் என்னுடன் வரலாம். 

முக்கியமான ஆதரவாளர்களுடன் சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்துவிட்டு, பின்னர் கரூரில் இணைப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இன்னும் ஒரு சில நாட்களில் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணையப்போகிறேன்’’ என சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ‘’அண்ணன் தி.மு.க.வுக்கு செல்வது அருமையான வாய்ப்பு. 5 மாநில தேர்தல்களில் மோடி அலை ஓய்ந்து ராகுல் அலை வீச தொடங்கிவிட்டது.  

தி.மு.க-காங். கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் செந்தில்பாலாஜி அடுத்த தேர்தல்களில் அமைச்சராவது உறுதி’’ என அடித்துச்சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். டி.டி.வி.தினகரனுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்ட பின்னர்தான் தி.மு.க.வுக்கு செல்ல செந்தில் பாலாஜி தீர்மானித்துள்ளார். ஆனால் தி.மு.க.வுக்கு தூது விடுவதற்கு முன்பே செந்தில்பாலாஜி அ.தி.மு.க. வுக்கு செல்ல தூது விட்டதாகவும், உரிய முக்கியத்துவம் தர தலைமை மறுத்ததால் தி.மு.க. பக்கம் சாய்ந்து விட்டதாகவும் கூறுகின்றனர். 

இதனால் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் டி.டி.வி.தினகரன் தனது ஆதரவாளர்களை கண்காணிப்பிலேயே வைக்கச் சொல்லி தனது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கூறியிருக்கிறாராம். இனி தனது கட்சி ஆட்களை சமாளிப்பது கஷ்டம் என்கிற நிலைக்கு வந்துவிட்ட டி.டி.வி தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை தனித்தனியாக அழைத்து பேசி கரன்சி கொடுத்து செட்டில் செய்து விடலாம். யாரும் வெளியே போகாமல் தக்க வைக்கப் பாருங்கள் ’’ எனவும் உத்தரவிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.