Asianet News TamilAsianet News Tamil

போட்டியில் யார் ஜெயித்தாலும் சரி.. உண்மையாக ஜெயித்தது என்னவோ போராட்டம் தான்

massive successful protest against ipl match in chennai
massive successful protest against ipl match in chennai
Author
First Published Apr 10, 2018, 7:21 PM IST


சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தாலும், ஐபிஎல்க்கு எதிரான போராட்டம், வெற்றி அடைந்துவிட்டது என்றே கூற வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஐபிஎல் கொண்டாட்டம் கூடாது என அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் உட்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதையும் மீறி சென்னையில் போட்டி நடத்தப்படுவதால், மாலை 4 மணி முதலே அண்ணா சாலை மற்றும் சேப்பாக்கம் மைதானத்திற்கு செல்லும் வழிகளிலும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

முன்னெச்சரிக்கையாக சேப்பாக்கம் மைதானத்திலும் மைதானத்திற்கு செல்லும் வழியிலும் சுமார் 4000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் மைதானத்தை நோக்கி பேரணியாக சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், வெற்றிமாறன், கௌதமன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அண்ணா சாலையே ஸ்தம்பித்தது.

சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் சென்னையின் முக்கிய பகுதியே ஸ்தம்பித்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் தமிழர் என்ற ஒற்றை அடையாளத்துடன் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தை கட்டுப்பட்டுத்த முடியாமல் போலீஸார் திணறினர். சென்னையில் போட்டியை நடத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை ஐபிஎல் நிர்வாகம் நாடியது. அந்தளவிற்கு போராட்டம் வலுவாக அமைந்தது. 

வீரர்களை தடுக்கவோ எந்தவிதமான தொந்தரவோ கொடுக்காமல் போட்டி சென்னையில் நடத்துவதற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், கௌதமன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தி இந்தியாவின் கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பியதே போராட்டத்தின் வெற்றிதான். 

மேலும் இரு அணிகளிலும் உள்ள வெளிநாட்டு வீரர்கள், இந்த போராட்டத்தின் தாக்கத்தை உணர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக கேட்டறிந்து இருப்பர். அந்த வகையில் இந்த போராட்டம் உலக கவனத்தை ஈர்த்திருக்கும் என்றே கூறலாம். 

எனவே போட்டியில் எந்த அணி ஜெயித்தாலும் சரி.. ஜெயித்தது என்னவோ போராட்டம் தான்..

Follow Us:
Download App:
  • android
  • ios